ரூ.1.87 லட்சத்துக்கு விற்பனையான கூரைக் கத்தாழை மீன்
தஞ்சை மாவட்டத்தில், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கள்ளிவயல் தோட்டம், மல்லிப்பட்டினம் உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். கடலுக்கு செல்லும் மீனவர்கள் வலையில் அரிதிலும் அரிதாக மருத்துவ குணம் வாய்ந்த மீன்கள் சிக்கும். இந்த மீன்கள் அதன் தரத்துக்கு ஏற்ப அதிக விலை போகும்.
அதிராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் வலையில் சிக்கிய மருத்துவ குணம் வாய்ந்த கூரைக் கத்தாழை மீன் அவருக்கு அதிக லாபத்தை ஈட்டிக்கொடுத்து உள்ளது. அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்தவர் ரவி. மீனவரான இவர், சனிக்கிழமை இரவு தனக்கு சொந்தமான நாட்டுப் படகு மூலம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். ஞாயிற்றுக்கிழமை காலை வலையில் சிக்கிய மீன்களுடன் அவர் கரை திரும்பினார். கரையில் வந்து மீன்களை பிரித்து பார்த்த போது வலையில் மிகவும் அரிதான 20 கிலோ எடையிலான கூரைக் கத்தாழை மீன் சிக்கி இருந்தது.
கூரைக் கத்தாழை மீனின் சிறப்பு அம்சமாக இந்த மீனில் உள்ள நெட்டி பார்க்கப்படுகிறது. இந்த நெட்டி மருத்துவக் குணம் கொண்டது என கூறப்படுகிறது. வலையில் சிக்கிய கூரைக்கத்தாழை மீனை ரவி அதிராம்பட்டினம் பெரிய மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றார். அங்கு அவரது மீன் ஏலம் விடப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் மீனை போட்டிபோட்டுக் கொண்டு ஏலம் எடுக்கத் தொடங்கினர். கடைசியில் 20 கிலோ எடை கொண்ட அந்த ஒரு கூரைக்கத்தாழை மீன் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 700க்கு ஏலம் போனது. இதனால் மீனவர் ரவி மகிழ்ச்சி அடைந்தார்.
இது பற்றி மீனவர்கள் கூறியதாவது:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கத்தாழை மீன்கள் சிக்காது. அரிதிலும், அரிதாகவே இந்த மீன் மீனவர்கள் வலையில் சிக்கும். இந்த வகை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கத்தாழை மீன்களின் அடி வயிற்றில் நெட்டி என்ற காற்றுப்பை இருக்கும். ஒரு மீனில் 50 கிராம் முதல் 100 கிராம் வரை இந்த நெட்டி இருக்கும். இந்த நெட்டி ஒயின் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. கத்தாழை மீனை இறைச்சிக்கு விற்றாலும், அதில் இருக்கும் நெட்டிக்குதான் விலை அதிகம் என மீனவர்கள் தெரிவித்தனர்.