ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி -எம்.பி
தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2010-இல் துணை முதல்வராக பதவி வகித்தபோது ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் மக்கள்தொகை, தொழில் வளர்ச்சி காரணமாக இத்திட்டத்தில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இவ்விரு மாவட்ட மக்களின் நலன் கருதி, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கடந்த 2020ஆம் ஆண்டு மக்களவையில் வலிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து, மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021- ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், இந்தத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழக நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்காக ரூ. 7,145 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் அறிவித்திருந்தார். இத்திட்டம் 2054-ஆம் ஆண்டு வரையிலான மக்கள்தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு செயல்படுத்தும் வகையில் கணக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வசிக்கும் 44 லட்சம் பொதுமக்கள் பயனடைவர். இத்திட்டத்திற்காக பென்னாகரம் பகுதியில் நீர் சுத்திகரிப்பு நிலையம், முதன்மை சமநிலை நீர்த்தேக்க மையம் அமைப்பதற்காக குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இரண்டாம் திட்டத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து 304 எம்எல்டி தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தற்போதைய மதிப்பீடு ரூ. 7,386 கோடியாகும். இதில் நகர பகுதி பங்கீடு ரூ. 2,232 கோடி, ஊரக பகுதி பங்கீடு ரூ. 4,470 கோடி தொழில்துறை பங்கீடு ரூ. 682 கோடி என முடிவு செய்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஜப்பான் சர்வ தேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பொருளாதார உதவிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இரண்டு நகராட்சிகள், ஓசூர் மாநகராட்சி, 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 6,802 கிராமப்புற குடியிருப்புகள் சுத்திகரிக்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் பெற்று பயனடையும் என்று தெரிவித்துள்ளார்.