தென்தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்னிந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தென்னிந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, வரும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் மார்ச் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபட்டுள்ளது.

Tags

Next Story