கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அரியலூர், ஏப் 24- தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வரதராஜ பெருமாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.

திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட விளைச்சல் நல்ல மகசூல் கிடைக்கவும், தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக உள்ள ஆடு, மாடுகள் பூரண நலத்துடன் விளங்கவும் வேண்டிக் கொண்டு, ஆண்டு திருவிழாவின் போது தங்களது வயலில் விளைந்த தானியங்களையும், ஆடு, மாடுகளையும் காணிக்கையை செலுத்துவது வழக்கம். இதனால் இக்கோவில் தென்னகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.

திருச்சி, தஞ்சாவூர், நாகை, சேலம், விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் மக்களின் குலதெய்வ கோவிலாக, இக்கோவில் விளங்குகிறது. இச்சிறப்பு பெற்ற கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 17ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் அருள்மிகு வரதராஜப்பெருமாள் சூரிய வாகனம், சிம்ம வாகனம், புன்னைமர வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஐந்தாம் நாள் திருவிழாவான வெள்ளி கருட சேவையை தொடர்ந்து, ஏழாம் நாள் திருவிழாவான திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒன்பதாம் நாள் திருவிழாவான திருத்தேர்கள் வீதி உலா இன்று நடைபெற்றது. விடியற்காலையில் மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் தேரடி மண்டபத்தில் எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் கமலா ராஜேந்திரன், ராமதாஸ், வெங்கடாஜலபதி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

முதல் தேரில் ஆஞ்சநேயர் வலம் வர, இரண்டாவது பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் வீதி உலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கோவிந்தா கோவிந்தா என்ற நாமகோசத்துடன் திருத்தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ராஜா வீதிகளின் வழியே திருத்தேர்கள் அசைந்தாடி வலம்வர வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், வயலில் விளைந்த தானியங்களையும், ஆடு, மாடுகளையும் பெருமாளுக்கு காணிக்கையாக அளித்தனர்.

பக்தர்களின் வசதிக்காக திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், கும்பகோணம், சேலம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமைகள் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். விழாவில் இறுதி நிகழ்ச்சியான ஏகாந்த சேவை நாளை இரவு நடைபெறுகிறது.

திருக்கல்யாணம் மற்றும் தேரோட்டம் முடிந்து ஏகாந்த நிலை அதாவது சந்தோஷமான மனநிலையில் உள்ள வரதராஜ பெருமாளை, நேரில் சந்தித்து தங்களது தேவைகளை கேட்கும் பக்தர்களுக்கு, வேண்டியவர்களுக்கு வேண்டியவனை தந்து அருள் பாலிக்கும் நிகழ்வான ஏகாந்த சேவை நாளை இரவு நடைபெறுகிறது. இவ்விழாவிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தண்ணீர் பந்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story