சென்னை, புறநகர் பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு மேகமூட்டமாக இருக்கும் !
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் 28 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் நாலுமுக்கு (திருநெல்வேலி) 4, புலிப்பட்டி (மதுரை), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாகுடி (புதுக்கோட்டை), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 2, போடிநாயக்கனூர் (தேனி), நாங்குனேரி (திருநெல்வேலி), மண்டபம் (ராமநாதபுரம்), காரைக்குடி (சிவகங்கை), தொண்டி (ராமநாதபுரம்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), சேர்வலாறு அணை (திருநெல்வேலி) தலா 1 சென்டிமீட்டர் என்று அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.