சேலத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம்

சேலத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம்

அமைச்சர் உதயநிதி

சேலத்தில் நாளை மக்களுடன் முதல்வர் திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க.வின் இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதற்காக பெத்தநாயக்கன்பாளையத்தில் 4 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து கார் மூலமாக மாலையில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மாநாட்டு திடலுக்கு வருகிறார்.

மாநாடு திடல் மற்றும் மாநாட்டில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிடுகிறார். மாநாட்டுக்கு இனிவரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து கட்சியினருக்கு ஆலோசனை வழங்குகிறார். தொடர்ந்து இரவு சேலத்தில் தங்குகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த திட்டம் கோவையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சேலம் தொங்கும் பூங்காவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் விழாவில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு , கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி, மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., எஸ்.ஆர். சிவலிங்கம், டி.எம். செல்வகணபதி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

Tags

Next Story