மக்களுடன் முதல்வர் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பு
மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்
சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுடன் முதல்வர் முகாமினை தொடங்கி வைத்தார். பல்வேறு துறைகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள 13 ஸ்டால்களை பார்வையிட்ட அவர் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது அதற்கான தீர்வு எப்போது தர முடியும் என்பது உள்ளிட்ட விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு வழங்கிய 32 பயனாளிகளுக்கு உடனடி தீர்வு கண்டு அதற்கான ஆணைகள் மற்றும் நலத்திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளரிடம் கூறும்போது, இன்று தொடங்கியுள்ள இந்த முகாம் அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடக்க உள்ளது இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். முகாம்களில் கோரிக்கை வைப்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். சேலம் மாவட்டத்தில் 142 இடங்களில் இந்த திட்ட முகாம் நடக்கிறது என்றார்.