சிப்காட் விரிவாக்கம்: போராடும் மக்கள்மீது அடக்குமுறை- அன்புமணி கண்டனம்
பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய சிப்காட் தொழிற்பூங்கா செயல்பட்டு வருகிறது. மொத்தம் 2,937 ஏக்கர் பரப்பளவிலான இந்த தொழிற்பூங்காவில் இரு அலகுகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவது அலகை அமைப்பதற்காக 3,174 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்திருக்கிறது. அதில் 361 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் தவிர மீதமுள்ள 2700-க்கும் கூடுதலான ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு சொந்தமான வளமான வேளாண் விளைநிலங்கள் ஆகும். செய்யாற்றை ஒட்டிய வட ஆளப்பிறந்தான், மேல்மா, தேத்துறை, இளநீர்குன்றம், குறும்பூர், நர்மாபள்ளம், அத்தி, வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பொன் விளையும் பூமியை இழக்க விரும்பாத, நிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து மேல்மா கூட்டுச் சாலையில் முகாம் அமைத்து கடந்த ஜூலை 2 ஆம் நாள் முதல் ஆயிரக்கணக்கான உழவர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் மக்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது. போராட்டத்தின் 125-ஆம் நாளான நேற்று உழவர்கள் அனைவரும் தங்களின் ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள் ஆகியவற்றை செய்யாறு கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் நோக்குடன், டிராக்டரில் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால், அதை முறியடிக்க பல்வேறு வழிகளில் முயன்ற காவல்துறை, அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், 200-க்கும் மேற்பட்ட உழவர்களை கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர். அதுமட்டுமின்றி, உழவர்களின் அறப்போராட்டத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை போராட்டக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு எதிரான இந்த சோதனைகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், போராட்டம் நடைபெறும் பந்தலில் தங்கியிருந்த 27 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் என்ன ஆனார்கள்? என்பது கூட இதுவரை தெரியவில்லை. அத்துடன் போராட்டம் நடைபெற்று வந்த பந்தலை காவல்துறையினர் சட்டவிரோதமாக பிரித்து எரிந்துள்ளனர். இது அப்பட்டமான அடக்குமுறை ஆகும். சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் முப்போகம் விளையும் பூமி ஆகும். இந்த நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், அவற்றின் உரிமையாளர்கள், அந்த நிலங்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து விடுவர். அதனால், தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க தொடர்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை மதித்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடுவது தான் மக்கள் நல அரசிற்கு அழகு ஆகும். ஆனால், தமிழக அரசோ, அதனிடமுள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி நிலத்தைப் பறிக்க துடிக்கிறது. மண்ணைக் காக்கும் உழவர்கள் மீது அடக்குமுறையை திமுக அரசு கட்டவிழ்த்து விடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், வெளியாட்களை அழைத்து வந்து திட்டத்திற்கு ஆதரவாக பேச வைத்தனர். ஆனால், அதை எதிர்த்து உழவர்கள் வெளிநடப்பு செய்ததால், நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் அப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இப்போது நிலங்களை பறிக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்காக உழவர்களின் அறப்போராட்டத்தை அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கின்றனர். இது ஒரு போதும் வெல்லாது; தோல்வியே பரிசாக கிடைக்கும். தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கும், வறுமை ஒழிப்பதற்கும் உதவும் தொழில் வளர்ச்சித் திட்டங்களில் சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் மிகவும் சிறந்தது என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. அந்த வகையில் சிப்காட் தொழிற்பூங்காக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ஒரு பிரிவினருக்காக அமைக்கப்படும் தொழிற்பூங்கா, விளைநிலங்களைப் பறித்து இன்னொரு பிரிவினரின் வாழ்வாதாரங்களை முடக்கக் கூடாது. தொழிலுக்காக உழவு ஒருபோதும் அழிக்கப்படக் கூடாது. தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படாது என்பதை கொள்கை அறிவிப்பாக தமிழக அரசு வெளியிட வேண்டும். செய்யாறு தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்து உழவர்களின் வாழ்க்கையில் அரசு விளக்கேற்ற வேண்டும். மண்ணைக் காக்க போராடி, காவல்துறையால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட 27 உழவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். மாறாக, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தில் அரசு உறுதியாக இருந்தால், அதை எதிர்த்து மக்களைத் திரட்டி நானே போராட்டம் நடத்துவேன். இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.