தாய் மொழியில் வழக்காடும் கோரிக்கை: சீமான் அறிக்கை
சீமான் அறிக்கை
தாய் மொழியில் வழக்காடும் முறையைக் கொண்டுவர வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: ''விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் இந்திய ஒன்றியத்தில் இருக்கும் மொழிவழித் தேசிய இனங்களின் அடிப்படை கோரிக்கையான நீதிமன்றங்களில தத்தம் தாய்மொழியில் வழக்காடும் உரிமை மறுக்கப்படுவது நாம் இன்னும் விடுதலை பெறாத அடிமை மக்கள் என்ற எண்ணத்தையே நிலைபெறச்செய்கின்றது. தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க காலவரையற்ற உண்ணாநோன்பிருக்கும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் - மக்கள் இயக்கம் சார்ந்த உறவுகளுக்கு எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த உண்ணாநோன்பைக் கருத்தில் கொண்டு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழியில் வழக்காடும் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம்''.