தஞ்சாவூரில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

தஞ்சாவூரில் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், சாலையோர கடையில் டீ குடித்தார்.

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, நாகப்பட்டினம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் ஓட்டு கேட்டு, சனிக்கிழமை மாலை, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். இதற்காக வெள்ளிக்கிழமை இரவு தஞ்சாவூர் வந்த மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை காலை அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில், வேட்பாளர் முரசொலியுடன் நடைபயிற்சி சென்றார்.

அப்போது அங்கு பல்வேறு விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த சிறுவர், சிறுமிகள், பொதுமக்கள் முதல்வர் ஸ்டாலினைக் கண்டதும் உற்சாகம் அடைந்து ஓடிவந்து பேசினர். அப்போது, பெரியவர்கள், குழந்தைகளுடன் செல்பி, வாலிபால் விளையாட்டு என சுமார் அரை மணி நேரத்திற்கு முதல்வர் உரையாடினார். தொடர்ந்து நடைபயிற்சிக்கு வந்தவர்களிடமும் பொதுமக்களிடமும் வாக்குச் சேகரித்தார். பின்னர் அங்கிருந்து காமராஜ் மார்க்கெட்டிற்கு சென்ற முதலமைச்சர் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் வாக்கு கேட்டார். அங்கு வியாபாரிகள் அளித்த சால்வைகளை பெற்றுக் கொண்டார். பின்னர், கீழ ராஜவீதியில் உள்ள தேநீர்க்கடை ஒன்றில் அமர்ந்து பொதுமக்கள், கட்சியினருடன் தேநீர் அருந்தினார்.

அதன் பிறகு 16 விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் , முதல்வர் ஸ்டாலினை சந்தித்து எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரையை ஒன்றிய அரசு அமல்படுத்த வலியுறுத்த வேண்டும், தமிழக நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் ச.சு.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி நீலமேகம், வேட்பாளர் முரசொலி, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆக மொத்தத்தில் இன்று முதல்வர் தஞ்சையில் மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார்.

Tags

Next Story