தி.மு.க. வாக்கு சரிந்துள்ளதா?: எடப்பாடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!!
CM Stalin
நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொம்மைகுட்டை மேட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய பஸ் நிலையம் திறப்பு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ரூ.664 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 16 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாமக்கல் முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் மொத்தம் ரூ.810 கோடியே 28 லட்சம் மதிப்பிலான திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். பின்னர் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு வளச்சிக்கு அடித்தளம் இந்த நாமக்கல் மாவட்டம். திராவிட மாடல் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டும் நம்ம திராவிட மாடல் ஆட்சியால், தொடர்ந்து தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து நடைபோட வைப்போம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்துவோம். அனைத்து வழிகளிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்கிறது. நவம்பர் முதல் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரில் சென்று அரசின் திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்ய உள்ளேன். மோகனூரில் உள்ள சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும். திமுகவுக்கு வாக்களிக்காதவர்களும் பாராட்டும் அரசாக இந்த அரசு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எந்த உலகில் இருக்கிறார்? கனவுலகில் இருக்கிறாரா? தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு சரிந்து விட்டதாக இபிஎஸ் கூறுகிறார். மாதந்தோறும் ஊக்கத்தொகை பெறும் மக்களிடம் கேளுங்கள், தி.மு.க.வின் மதிப்பு தெரியும். நடந்துமுடிந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. செல்வாக்கு பெற்றுள்ள பகுதிகளிலும் தி.மு.க. வெற்றி வாகை சூடியுள்ளது என தெரிவித்தார்.