மக்கள் நல திட்டங்களின் நாயகன் - முதல்வருக்கு மதுரை மக்கள் புகழாரம்
மதுரை மாவட்டம் தமிழ்நாட்டினை அனைத்துத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக திகழ்ந்திடும் வகையிலும், மாநிலத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனிலும் அதீத அக்கறைக் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏழை - எளிய மக்களும் ஏற்றம் பெற்றிட எண்ணற்ற நல்ல பல திட்டங்கள் நாளும் திறம்பட செயல்படுத்தி மக்களின் மனங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்துள்ளார் திராட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றால் அது மிகையில்லை.
2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று அன்றைய தினமே கையொப்பமிட்ட முத்தான ஐந்து திட்டங்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், ஆவின் பால் விலை குறைப்பு மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட தனித் துறை ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஆட்சிப் பொறுப்பேற்று முத்தான மூன்று ஆண்டுகளில் உலகமே அஞ்சிய கோவிட் -19 போன்ற பெரும் தொற்று, இயற்கை பேரிடர்களான அதீத கனமழை, இயற்கை சீற்றம் போன்ற நிகழ்வுகளில் அனைத்திலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மக்களோடு மக்களாக நின்று அர்ப்பணிப்புடன் மக்கள் பணியாற்றியுள்ளார்.
கடந்த மூன்றாண்டுகளில் தொழில்துறையில், அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், ஏற்றுமதியில், கல்வியில், பொருளாதார வளர்ச்சியில், மருத்துவத்தில், கிராமங்கள் மற்றும் நகரங்களில் உட்புறக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில், வேளாண்மை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முதலிடத்திலும், முன்னணியிலும் தமிழ்நாட்டினை முன்னிறுத்தி, பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு நான்காம் ஆண்டில் நம்பிக்கையோடு அடியெடுத்து வைக்கும் நம் மக்களின் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் நிறைவேற்றிள்ள எண்ணற்ற திட்டங்களில், முத்தான எட்டு திட்டங்களைப் பற்றி தமிழ்நாட்டின் திக்கெட்டிலும் உள்ள ஏழை எளியோர், பயனடைந்தோர் உள்ளன்போடும், உணர்ச்சிப் பெருக்கோடும் பகிர்ந்த கருத்துக்கள் மக்களின் பார்வைக்கு:-
1. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி மாதந்தோறும் 1000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் நாளாது வரையில் 1 கோடியே 15 இலட்சம் குடும்பத் தலைவிகள் பயனடைந்துள்ளனர். ஒவ்வொருவரின் வீட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாக அமைய வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ”கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதியன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார்.இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முதலாக 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறுகின்ற வகையில் இத்திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.
2 விடியல் பயணத் திட்டம் ஆட்சிப் பொறுப்பேற்ற அன்றைய தினமே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற வகையில், அரசுப் பேருந்துகளில் அனைத்து மகளிர் / திருநங்கைகள் / மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் இந்த திட்டத்தின் வாயிலாக 445 கோடி முறை பயணம் செய்து மாதந்தோறும் ரூ.888 வரை சேமிப்பு. தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 07.05.2021-அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார். தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியம் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் 08.05.2021 முதல் பயணம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.
3. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தமிழ்நாட்டில் நகர்புற பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 18.5 இலட்சம் மாணாக்கர்கள் இத்திட்டத்தினால் பயனடைகிறார்கள். புரட்சிகரமான இத்திட்டத்தினை ஏனைய பிற மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடு கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக மொத்தம் 1,545 பள்ளிகளைச் சார்ந்த 1,14,095 மாணவ, மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். பசியோடு பள்ளிக்கு வரக்கூடிய பிள்ளைகளை பட்டினியாக வைத்து அவர்களுக்கு பாடம் சொல்லித் தரக் கூடாது என்ற உன்னத நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை கீழ் அண்ணாத்தோப்பு பகுதியில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் 15.09.2022 பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளன்று நடைபெற்ற விழாவில் ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை” தொடங்கி வைத்தார்.முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் 25.08.2023-அன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.
4. நான் முதல்வன் திட்டம் தமிழ்நாட்டின் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்குகின்ற வகையில், நான் முதல்வன் என்கின்ற முதலமைச்சரின் கனவுத் திட்டத்தின் மூலம் 28 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 6,714 மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் 01.03.2022-அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ”நான் முதல்வன்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையை வெளியிட்டார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டிப் பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.
5. புதுமைப் பெண் திட்டம் சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த சமுதாயத்தினரை, கல்வி கற்ற பெண்களால் மட்டுமே உருவாக்கிட இயலும் என்பதற்கேற்ப, பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் தமிழ்நாடு முதலமைச்சரின் உள்ளத்தில் உதித்த உன்னதத் திட்டமே புதுமைப் பெண் திட்டமாகும். (மூவலூர் இராமாமிர்தம் அம்மையர் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் ) இத்திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்பில் சேர்ந்த 2.73 இலட்சம் கல்லூரி மாணவிகளுக்கு, மாதம் ரூ.1,000/ உதவித் தொகை வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் ”புதுமைப் பெண்” திட்டத்தின் வாயிலாக 6,485 மாணவியர்கள் மாதந்தோறும் ரூபாய் 1,000 பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றி செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்க்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதம் ரூ. 1,000/- உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டத்தை முதற்கட்டமாக சென்னையில் 05.09.2022-அன்றும், இரண்டாம் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 08.02.2023-அன்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://penkalvi.tn.gov.in/ என்ற இணையதளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் பதிவு செய்து விண்ணப்பிக்கும் தகுதியான மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நேரடியாக அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.
6. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இத்திட்டத்தினால் 1 .70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 8 இலட்சத்து 46 ஆயிரத்து 461 நபர்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் 05.08.2021-அன்று கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், சாமனப்பள்ளி கிராமத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், இயன்முறைச் சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச் சேவைகள் அளிக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ள பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் தனது குழு உறுப்பினர்களுடன் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். மக்களைத் தேடி மருத்துவத் திட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மகத்தான திட்டங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பொதுமக்களிடையே இத்திட்டமானது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
7. இன்னுயிர் காப்போம் / நம்மைக் காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் இந்த உயிர் காக்கும் உன்னத திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் 213.47 கோடி ரூபாயில் செலவில் 2.45 இலட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முதல் ஒரு மணி நேரம் 'தங்க நேரம்' என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துவிட்டால், உயிரைக் காப்பாற்றிவிடலாம். ஆகவே, சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்கிற முன்னோடி திட்டம் செயல்படுத்தி வருகிறது.
8. பட்டியலின மக்கள் தொழில் முனைவோர் ஆக்கிட (அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்) பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில்முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு, மிக குறுகிய காலகட்டத்திலேயே இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இணைய வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுத்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் பத்து நாட்கள் தொழில்முனைவு பயிற்சி தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் வழங்கப்பட்டு 1,303 தொழில்முனைவோர்களுக்கு ரூ.159.76 கோடி அரசின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
இதில் 288 பெண் தொழில்முனைவோருக்கு ரூ.33.09 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் வாயிலாக 21 நபர்களுக்கு ரூபாய் 2 கோடியே 99 இலட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு திட்டங்களின்கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோரின் பங்கு குறைவாக இருப்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு தொழில் முனைவோர்களுக்கென பிரத்தியேக சிறப்பு திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்ட தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பான நிதி நிறுவனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் மாவட்ட தொழில் மையம் விளங்கும்.
கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற மதுரை மாவட்டம், ஒத்தக்கடை கிராமத்தை சேர்ந்த நந்தினி தெரிவித்ததாவது:- என் பெயர் நந்தினி. நாங்கள் மதுரை மாவட்டம், ஒத்தக்கடை கிராமத்தில் வசித்து வருகிறோம். வீட்டிலேயே சிறிய தையல் இயந்திரத்தை கொண்டு தையல் வேலை செய்து வருகிறேன். எனது கணவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். எங்களுக்கு கிடைக்கின்ற சிறிய வருமானத்தை வைத்து குடும்பம் நடத்தி வருகிறோம். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்ப பதிவு விளம்பரத்தினை பார்த்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவை அருகில் உள்ள பள்ளிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்கள். நானும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை கொண்டு சென்றேன் அவர்களே எனது விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து எனது கையொப்பத்தினை பெற்றுக் கொண்டனர். உடனடியாக என்னுடைய விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டது என தொலைபேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. 14.09.2023 அன்றே எனது வங்கிக் கணக்கில் 1 ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளது என குறுஞ்செய்தி எனது தொலைபேசி எண்ணிற்கு வந்தது. இந்த குறுஞ்செய்தியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து எனது கணவர் மற்றும் அருகில் உள்ள உறவினர்களிடம் தெரிவித்தேன். இது எங்களின் “உதவித் தொகை இல்லை, இது எங்களின் உரிமைத் தொகை” என பெருமிதம் கொள்கிறேன்.
காலை உணவு திட்டம் தொடர்பாக மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த த.ஜெயஸ்ரீ தெரிவித்ததாவது:- எனது பெயர் ஜெயஸ்ரீ. எனது கணவர் பெயர் சிவக்குமார். நாங்கள் செல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றோம். எங்களுக்கு 1 ஆண் குழந்தை, 1 பெண் குழந்தை என 2 குழந்தைகள் உள்ளனர். எங்கள் குழந்தைகள் இருவருமே மாநகராட்சி ஆதிமூலம் ஆரம்பப் பள்ளியில் படித்து வருகின்றனர். நாங்கள் வீட்டிலேயே உணவு தயாரிக்கும் முறையில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றோம். இதனால் நாங்கள் தூங்குவதற்கு இரவு வெகுநேரம் ஆகிவிடும். காலையில் எழுந்து குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுத்து பள்ளிக்கு அனுப்புவதற்கு சிரமமாக உள்ளது. குழந்தைகளுக்கு காலை உணவுதான் ஆரோக்கியத்தை கொடுக்கும் என்பதை அறிந்திருந்தாலும் கூட எங்களால் குழந்தைகளுக்கு சரியாக உணவு செய்து கொடுக்க முடியவில்லை. குழந்தைகள் சாப்பிடாமல் பள்ளிக்கு செல்கின்றனர் என்பதை நினைத்து தினந்தோறும் வருத்துடன் இருப்போம். தற்போது, தமிழக முதல்வர் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் குழந்தைகள் பள்ளியிலேயே வயிற்றுக்கு சாப்பிட்டு கொள்வார்கள் என்று நினைக்கும்போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்த திட்டத்தை கொண்டு வந்த நமது தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறும் செல்வி.தெ.நிவேதா அவர்கள் தெரிவித்ததாவது:- நான் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை பெயர் தெய்வேந்திரன். விவசாயம் செய்து வருகிறார். நான் அலங்காநல்லூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தேன். எனது பெற்றோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலும் என்னை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். அதன்படி, மதுரை யாதவா கல்லூரியில் பி.எஸ்.சி.கணிதம் பாடப்பிரிவை தேர்வு செய்து தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் என்னைப்போன்ற ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த மாணவியர்களின் கல்லூரி கனவை நனவாக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெறும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நான் விண்ணப்பித்தேன். அதன்படி, கடந்த மாதம் தொடங்கி எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் என்னுடைய படிப்பு செலவிற்காக எனது பெற்றோரின் சுமை குறையும். இத்திட்டத்தை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்க்கு என்னைப் போன்ற கிராமப்புற மாணவியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.