வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்
Cyclone
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது புயலாக வலுப்பெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமத்ரா மற்றும் அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. இந்த காற்று சுழற்சியின் விளைவாக அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருமாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இது படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர் 25ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு நகரும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வட மேற்கு திசையில் நகர்ந்து வட இலங்கை மற்றும் டெல்டா கடற்கரையை நவம்பர் 26ம் தேதி அடையும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடல் வெப்பநிலை கடந்த 10 நாட்களாக தமிழகம் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இயல்பை விட அதிகரித்து காணப்படுகிறது. டெல்டா மற்றும் இலங்கையை ஒட்டிய கடலோர பகுதிகளில் புயலாக மாறுவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.