தென்னை விவசாயிகள் சாலை மறியல்

தென்னை விவசாயிகள் சாலை மறியல்
ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டையில் நியாய விலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி தென்னை விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்னை விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வழங்க வேண்டும். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக, தேங்காய் எண்ணெயை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என உறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும். தேங்காய்க்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும்.

கொப்பரைத் தேங்காய்க்கு கூடுதலான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், அமைச்சர்களை சந்தித்து பேசியும், உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் (அறந்தாங்கி முக்கம் பகுதியில்) கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்கத் தலைவர் மருங்கப்பள்ளம் இ.வீ.காந்தி தலைமையில், செவ்வாய்க்கிழமை காலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில், துணைத் தலைவர் பி.கோவிந்தசாமி, கவுரவத்தை தலைவர் ப.வேலுச்சாமி, செயற்குழு உறுப்பினர் எஸ்.நாகராஜன், அகில இந்திய கூலித் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் அண்ணாதுரை, தென்னை விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் கமால் பாட்சா, ரத்தினகுமார், பாலசுப்பிரமணியன், குழந்தைராஜ், முருகையன், சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், ஆனந்தன், கார்த்திகேயன் மற்றும் பல்வேறு தென்னை விவசாய சங்க அமைப்புகள், விவசாயிகள் சங்கங்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தென்னை விவசாயிகளை, பட்டுக்கோட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் பிருத்திவிராஜ் சவுகான் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story