துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த இளநீர் வியாபாரி
ஜெயங்கொண்டம் அருகே தேவனூர் கல்வெட்டு பகுதியில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், போலீசாரை கண்டவுடன் தனது மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு ஓடிவிட்டார். போலீசார் சென்று பார்த்த பொழுது, வாகனத்தில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்கள் மற்றும் அதற்கு தேவையான மருந்துகள் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் அந்த வாகனத்திற்கு நம்பர் பிளேட் இல்லை என்பது தெரிய வந்தது. இதனை எடுத்து மேற்கண்ட பொருள்களை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடியவர் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு நிலையில், போலீசாரின் விசாரணையில், தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி குருசாமி மகன் செல்வம் (47 ) இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
செல்வத்தின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது செல்வத்தின் மீது கடந்த 2012 ஆம் ஆண்டில் இதுபோல் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார் அவரை தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டுத் துப்பாக்கி எங்கு தயாரிக்கப்பட்டது, அவரே தயாரித்தாரா அல்லது மாற்று நபர்களிடமிருந்து வாங்கினாரா என்பது குறித்தும், துப்பாக்கி தேவையான மருந்துகள் யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்தும் செல்வத்திடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து நாட்டுத் துப்பாக்கியை செல்வம் பயன்படுத்துவது பறவைகள் அல்லது விலங்குகள் வேட்டைக்கு அல்லது வேற ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இரவில் நாட்டு துப்பாக்கியுடன் வந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம், ஜெயங்கொண்ட பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.