கண்மாயில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி!
மாணவர் பலி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கண்மாயில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கேரளா மாநிலம் கொட்டியும் சாத்தனூரைச் சேர்ந்த மரிய மைக்கேல் மகன் ஞானராஜ் (18). இவர் அங்குள்ள கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் எட்டயபுரம் அருகே வாலம்பட்டி கிராமத்தில் இன்று (11-ம் தேதி) நடைபெற உள்ள உறவினர் வீட்டு விழாவுக்காக நேற்று காலை மரிய மைக்கேல் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மதியம் ஞானராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மேல ஈரால் கண்மாய் கரை அருகே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.
குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற ஞான ராஜ் தண்ணீரில் மூழ்கினார். உடனடியாக அருகே இருந்த இளைஞர்கள் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து எட்டயபுரம் போலீஸார் மற்றும் கோவில்பட்டி தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்துக்கு சென்று சுமார் ஒரு மணி நேரமாக தேடி ஞானராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.