மலையேற்ற பயிற்சி முகாம் நிறைவு
மலையேற்ற பயிற்சி
அகில இந்திய தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவிகளின் 37-ம் ஆண்டு மலையேற்ற பயிற்சி முகாம், முதல் குழுவின் மலையேற்ற முகாம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 6-ம் தேதி தொடங்கியது. இதில், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வரும் 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவிகள் பங்கேற்று உள்ளனர்.
இந்த குழுவினர் பயிற்சியாளர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஊட்டி அருகேயுள்ள கேத்தி சி.எஸ்.ஐ., கல்லூரி, சி.எஸ்.ஐ., சி.எம்.எம்., பள்ளி மற்றும் முத்தோரை பாலாடா ஏகலைவா பழங்குடியினர் மாதிரி பள்ளி ஆகிய 3 மையங்களில் தங்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். காலை 8 மணிக்கு கிளம்பி தினசரி 20 கிலோமீட்டர் தூரம் நடக்கின்றனர்.
மலையேற்ற பயணத்தின்போது, ஸ்டாரபெர்ரி விவசாய பண்ணை, மூலிகை உற்பத்தி மற்றும் பயன்பாடு, பழங்குடியினர் ஆய்வு மையம் உள்ளிட்டவை குறித்தும் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் யுனெஸ்கோவின் அந்தஸ்து பெற்ற பாரம்பரிய மலைகளில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, பழங்குடியினர் அருங்காட்சியகம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். இந்த பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவுபெற்றது. மலையேற்ற பயிற்சி முகாம் அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக மாணவிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து 2-வது குழுவின் முகாம் விரைவில் தொடங்குகிறது. இதில் ஜம்மு - காஷ்மீர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த தேசிய மாணவர் படை மாணவிகள் பங்கு பெற உள்ளதாக முகாம் பயிற்சியாளர்கள் தெரிவித்தனர்.