சனாதனம் சர்ச்சை உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன்!
உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன தர்மம் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்றார். ஆனால் சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜக பொய்யான தகவலைப் பரப்பியதால் பெரும் சர்ச்சையாக நாடு முழுவதும் வெடித்தது.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக மூக ஆர்வலர் பரமேஸ் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உதயநிதி ஸ்டாலினை ஜூன் 25-ந் தேதி நேரில் ஆஜராக பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இன்று பெங்களூர் 42-வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் முன்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆஜரானார். இன்றைய விசாரணையின் போது அமைச்சர் உதயநிதிக்கு பெங்களூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 8-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.