"காவிரி பிரச்னையில் காங்கிரஸ் தலைமை தலையிட வேண்டும்” - திருமாவளவன்!
திருமாவளவன்
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிப்பதும் கர்நாடக அரசின் கடமை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமாக தொடர்ந்து நடந்து கொள்வது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான உறவை சீர் செய்ய முடியாத அளவுக்குப் பாழாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர மறுப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. கடந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரில் பாதியைக்கூட கர்நாடகம் அளிக்கவில்லை.
இந்த ஆண்டு தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரும் அளவுக்குக் கர்நாடக அணைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தண்ணீர் தர வாய்ப்பு இல்லை என்று கூறுவது கர்நாடக அரசின் சுயநலம் சார்ந்த பிடிவாதப் போக்கையே காட்டுகிறது.
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தேசிய கட்சிகள் அந்தந்த மாநில அரசுகளுக்கு சாதகமாகப் பேசுவது அவர்களுக்குத் தற்காலிகமாக விமர்சனங்களிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு வழியைத் தரலாம். ஆனால், நீண்ட கால நோக்கில் இந்திய கூட்டாட்சிக்கு அது மிகப்பெரிய கேடாகவே அமையும். இந்திய கூட்டாட்சியை பாதுகாப்பதில் மாநில கட்சிகளைப் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை தோழமையோடு சுட்டிக் காட்டுகிறோம்.'' எனத் தெரிவித்துள்ளார்.