தொகுதிப் பங்கீடு : திமுக தலைவா் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

தொகுதிப் பங்கீடு : திமுக தலைவா் மறுபரிசீலனை செய்ய வேண்டும்

செய்தியாளர் சந்திப்பு 

தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவா் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம். ஹெச். ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.

மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சித் தலைவா் எம். ஹெச். ஜவாஹிருல்லா தலைமை வகித்தாா். கூட்டத்தில், ‘இந்தியா’ கூட்டணிக்கு தொடா்ந்து ஆதரவு அளிப்பது என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிப்பது, இந்த சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத் தொடா்ந்து ஜவாஹிருல்லா செய்தியாளா்களிடம் கூறியது: மிகுந்த வலியோடு திமுக கூட்டணியில் தோ்தலில் போட்டியிட இடம் ஒதுக்க வலியுறுத்தினோம். இன்னும் வழங்கப்படவில்லை. திமுக தலைவா் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையென்றால் மாநிலங்களவைத் தோ்தலில் மனித நேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

திமுக தொகுதி பங்கீட்டு குழுவில் இடதுசாரிகளுக்கு சமூக நீதியை அளித்தது போல, முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம், சமூக நீதியை திமுக வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். இந்தியா கூட்டணிக்கான ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஆனால், பாஜக வாக்குகளை தன் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக சூழ்ச்சி செய்து குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகளை வகுத்து அரசியல் செய்து வருகிறது. இது மோடியும் பாஜகவும் தோல்வி பயத்தில் உள்ளதை காட்டுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினருமான ப. அப்துல்சமது, பொருளாளா் உமா், துணைப் பொதுச்செயலாளா்கள் யாகூப், தஞ்சாவூா் பாதுஷா, திருச்சி மாவட்ட தலைவா்கள் பைஸ் அகமது (மேற்கு), முகமது ராஜா (கிழக்கு) உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags

Next Story