விபத்தில் கட்டிட மேஸ்திரி பலி- உறவினர்கள் போராட்டம்
இழப்பீடு கேட்டு உறவினர்கள் போராட்டம்
பேரணாம்பட்டு அருகே பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (37), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பல்லலகுப்பம் நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அதே கிராமத்தை சேர்ந்த திலீப்குமார் (29) ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் சிவக்குமார் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து நடந்த உடனே திலீப்குமார் தப்பியோடி விட்டார்.
அவரை கைது செய்யக்கோரி நேற்று முன்தினம் பிணத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நேற்று மேல்பட்டி போலீசார் திலீப்குமாரை கைது செய்தனர். இந்தநிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் சிவக்குமாரின் உடல் பல்லலகுப்பம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் உடலை வாங்க மறுத்து பேரணாம்பட்டு -மேல்பட்டி சாலையில் சிவக்குமாரின் உறவினர்கள் மறியலில் ஈடுப்பட்டனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அப்போது சிவக்குமாரின் மனைவி வேண்டா விபத்து ஏற்படுத்திய திலீப்குமாரிடமிருந்து ரூ.20 லட்சம் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சிவக்குமாரின் உடலை பெற்றுக்கொண்டனர்.