தொடர் மழை எதிரொலி : சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பவுர்ணமி பூஜைக்காக சதுரகிரி மலைக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது இதனால் மாநில முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு 21 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு மாதங்களிலும் வரக்கூடிய பிரதோஷம், அமாவாசை, சிவராத்திரி, பௌர்ணமி உள்ளிட்ட நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கனமழை எச்சரிக்கை காரணமாகவும் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள வழுக்காம்பாறை, சங்கிலி பாறை ஓடை நாவலூற்று, பிளாவடி கருப்பசாமி ஓடை பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வைகாசி மாத பௌர்ணமிக்காக 20, 21, 22, 23 ஆகிய நான்கு நாட்கள் பக்தர்களுக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டிருந்தது தற்போது வானிலை மையத்தின் எச்சரிக்கை காரணமாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் தாணிப்பாறை அடிவாரத்திற்கு வந்த ஒரு சில பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

Tags

Next Story