தர வரிசையில் தொடர்ந்து முதலிடம் - சீர்வரிசை எடுத்து பாராட்டு
தஞ்சாவூரில், கடந்த 1967 ஆம் ஆண்டு செப்.12 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரால், கல்லுக்குளம் பகுதியில் நகராட்சி மருந்தகமாக திறக்கப்பட்டது. பிறகு, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2023ஆம் டில்லி மருத்துவக்குழுவினரால் தேசிய தரச் சான்று பெற்றது. அதற்காக வழங்கப்பட்ட மூன்று லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மருத்துவமனை வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டது.
இம்மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 70 கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை, ஆலோனை பெற்று வருகிறார். தாய்சேய் நல கண்காணிப்பு மையம், கர்ப்பிணிகளுக்கு மதியஉணவு மற்றும் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து, பாலிகிளினிக் எனப்படும் சிறப்பு மருத்துவர்கள் மூலம் இதுவரை 22,124 பேருக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொற்றா நோயான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, மார்பகப் புற்று, கருப்பை வாய் புற்று நோயாளிகள் என சுமார் 26 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளின் நேரத்தை பயனுள்ளதாகவும், நல்ல மன நிலையை உருவாக்கவும் 600 புத்தங்களை கொண்ட தாய்மை நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் 19 சுகாதார குறியீடுகள் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தரவரிசை பட்டியலை மாநில அளவில் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்திற்கான தர வரிசை பட்டியலில், கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மாநில அளவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல் இடம் பெற்றுள்ளது.
இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கமிஷனர் மகேஸ்வரி, நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாநகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் மலர் மாலைகள், மலர் கிரீடம், பழங்கள், இனிப்புகள் ஆகிய பொருட்களை மேள தாளத்துடன் சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வரை ஊர்வலமாக எடுத்து சென்றனர். அங்கு, கல்லுகுளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முத்துக்குமார் தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள், துாய்மை பணியாளர்கள் 30 பேருக்கும் மாலை அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.