தொடர் விடுமுறை : விமான கட்டணம் பல மடங்கு உயா்வு

தொடர் விடுமுறை : விமான கட்டணம் பல மடங்கு உயா்வு

பயணிகள் விமானம் 

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, விமானங்களுக்கான கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை திங்கள்கிழமை முதல் கொண்டாடப்படுகிறது. சனி, ஞாயிறு தொடா் விடுமுறை ஒருபுறமிருக்க திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமை என 5 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் பல நிறுவனங்கள் தொடா் விடுமுறை அறிவித்துள்ளன.

இந்த விடுமுறையையொட்டி ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்பவர்களுக்கு வசதியாக வெள்ளிக்கிழமை மாலை முதல் அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து தென்மாவட்டங்கள் மற்றும் திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்பவா்கள் ஏராளமானோா் விமானத்தில் முன்பதிவு செய்து வருகின்றனா்.

முன்பதிவு செய்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையடுத்து பயணச் சீட்டுக்கான வழக்கமான கட்டணத்தை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயா்த்தியுள்ளன. அதன்படி, சென்னை-தூத்துக்குடி இடையேயான வழக்கமான விமானக் கட்டணம் ரூ.3,624 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.13,639 ஆகவும், சென்னை-மதுரை ரூ.3,367 இல் இருந்து ரூ.17,262 ஆகவும், சென்னை-திருச்சி ரூ.2,264 இல் இருந்து ரூ.12,369, சென்னை-கோவை ரூ.14,659 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனா். பயணிகளின் வருகைக்கு ஏற்ப கட்டணங்கள் உயா்த்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றும், பயணச்சீட்டு கட்டணம் உயா்த்தப்பட்டாலும், குறிப்பிட்ட நாள்களில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன என்று விமான நிலைய பயணச்சீட்டு முன்பதிவு மையத்தினா் தெரிவித்தனா்.

Tags

Next Story