ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில்  செப்பேடுகள் கண்டுபிடிப்பு


செப்பேடு


இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் சுவடி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 676 கோவில்களில் சுவடிகள், செப்பு பட்டயங்கள் இருப்பு குறித்து கள ஆய்வு செய்யப்பட்டன. இந்த கள ஆய்வின் மூலம் 9 செப்பேடுகள், 34 செப்பு பட்டயங்கள், 2 வெள்ளி ஏடுகள், 1 தங்க ஏடும் கண்டறியப்பட்டு பட்டியலிடப்பட்டன.

தூத்துக்குடி அருகே ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் கண்டறியப்பட்ட செப்பேடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். இந்த கோவிலில் 2 செப்பேடுகள் கண்டறியப்பட்டன.

இதுகுறித்து உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப் பாண்டியன் கூறியதாவது: ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவில் செப்பேடுகள் அசாது நவாப்பு சாய்பு என்ற இசுலாமியருக்கு புண்ணியம் கிடைத்திட செய்யப்பட்ட தானம் பற்றி கூறுகின்றன. ஆற்காடு நவாப்புகள் 1690 முதல் 1801 வரை தென்னிந்திய கர்நாடக பகுதிகளை ஆண்ட மன்னர்கள் ஆவர். இவர்கள் தலைநகரம் இன்றைய சென்னை அருகில் உள்ள ஆற்காடு ஆகும். தமிழக வரலாற்றில் இவர்கள் கர்நாடக நவாப்புகள் என்று அழைக்கப்படுகின்றனர். நவாப்புகள் ஆட்சி காலத்தில் நவாப்புகள் பெயரில் இந்து கோவில்களில் பல புண்ணிய தர்ம கட்டளைகள் கொடுக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் உள்ள 2 செப்பேடுகளும் கி.பி.1774-ம் ஆண்டில் எழுதப்பட்டவை ஆகும். இந்த 2 செப்பேடுகளும் அந்த காலத்தில் வாழ்ந்த ராசமானியார் அசாது நாவாப்பு சாய்பு என்பவருக்கு புண்ணியம் கிடைக்க ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கும், மாறமங்கலம் சந்திரசேகர சுவாமி கோவில் திருப்பணிக்கும் திருப்பணி தர்ம கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்று முதல் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதன் இறுதியில் 30 நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 2-வது செப்பு பட்டயத்தின் முன்பகுதியிலும் மேற்கண்ட செய்தி கூறப்பட்டு உள்ளது. கூடுதலாக ஆயிரத்தெண் விநாயகர் கோவிலுக்கு கிரைய சாசனம் அடிப்படையில் வாங்கி வாகன கட்டளை ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல குறிப்புகளும் செப்பேடுகளில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story