வருமானத்திற்கு அதிகமாக சொத்து - ரெய்டு!

ரூ.2 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறை நில அளவை ஆய்வாளர் தங்கிய தனியார் விடுதியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (50) தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்து சமய அறநிலையத் துறையில் நில அளவை ஆய்வாளராக கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் பணிபுரிந்து வருகிறார். குந்தா, கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளும் இவரது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

இதற்காக ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மாத வாடகை அடிப்படையில் தங்கி இருந்தார். இந்நிலையில் பாஸ்கர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், ஆவடி பகுதிகளில் பணிபுரிந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இவர் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இன்று பாஸ்கரின் சொந்த ஊரான ஆர்பாக்கம் மேட்டுக்காலனி வீடு உள்பட ஒரு சில இடங்களில் சோதனை நடத்தினர். அதேபோல் ஊட்டியில் பாஸ்கர் தங்கியுள்ள விடுதியில் லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் காலை 2 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு சில ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த விவரங்கள் குறித்து விசாரணை முடிவில் தெரிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையால் ஊட்டியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story