பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர், வெம்பக்கோட்டை, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 300க்கு மேற்பட்ட சிறு குறு பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றனர். இந்த நிலையில் வெம்பக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய அரசின் சுற்று சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் மற்றும் சரவெடி மற்றும் பேரியம் நைட்ரேட் க்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரியும் மற்றும் பட்டாசு ஆலைகளில் சோதனை செய்யும் அதிகாரிகள் பாரபட்சமின்றி பட்டாசு ஆலைகளில் சோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த பட்டாசு ஆலைகளின் தொடர் வேலை நிறுத்த போராட்டத் தால் பட்டாசு ஆலைகளில் பணி புரிந்த சுமார் 1000 க்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் வெம்பக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பட்டாசு ஆலை தொழிலாளர்கள் 800 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் பட்டாசு ஆலைகளில் சோதனையிடும் அதிகாரிகள் சிறிய பட்டாசு சாலைகள் மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் என பாரபட்சம் காட்டி சோதனை மேற்கொள்வதால் சிறிய பட்டா சாலைகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பட்டாசு உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டினர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கைகளை வெம்பக்கோட்டை தாசில்தார் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒரு பெண்மணி கண்ணீர் மல்க எங்களின் வாழ்வாதாரமான பட்டாசு தொழிலை நிரந்தரமாக எங்களுக்கு திறந்து வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பட்டாசு ஆலை உரிமையாளர் பேசும் போது பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றவிட்டால் இந்த விவகாரம் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் என்றார்.