தமிழகத்தில் கஞ்சா போதையால் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்!

தமிழகத்தில் கஞ்சா போதையால் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்!

தமிழகத்தில் கஞ்சா போதையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தமிழகத்தில் கஞ்சா போதையால் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனி கிராமத்தில் கஞ்சா போதையில் இருந்தவர்கள் கார்த்திக் என்ற இளைஞர் மற்றும் அவரது தந்தை மீது இருசக்கர வாகனத்தை ஏற்றியதில் கார்த்திக் உயிரிழந்துள்ளார். அவரது தந்தை படுகாயமடைந்துள்ளார். தமிழகத்தில் போதை இளைஞர்களால் ஏற்படும் சட்ட-ஒழுங்கு பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் உள்ள குக்கிராமங்கள் வரை போதைப் பொருட்கள் பயன்பாடும் அது தொடர்பான குற்றச் செயல்களும் அதிகரித்து வருகின்றன. கஞ்சா கடத்தல், விற்பனை, கைது, போதையில் தகராறு, கொலை என தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கஞ்சா போதை தொடர்பான செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. கடந்த ஒருவாரத்தில் மட்டும் இதுபோன்ற ஏராளமான குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. திருமுல்லைவாயலில் போதை இளைஞர்களால் 9 பேர் வெட்டப்பட்டனர். மதுரை ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா போதை இளைஞர்களால் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் தாக்கப்பட்டார்.

பல்லாவரத்தில் சாலையில் சென்ற இளைஞரை போதை இளைஞர்கள் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இப்படி ஏராளமான சம்பவங்கள் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நடைபெற்றுள்ளன. போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழக இளைஞர்களைக் காக்கும் நடவடிக்கையில் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வியையே நடைபெறும் குற்றச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. மதுப் பழக்கத்தால்தான் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்த நமக்குப் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது மிகப் பெரிய அளவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம். கடுமையான போதையும், மோசமான பின் விளைவுகளையும் தரக் கூடிய கஞ்சா துகள்கள், இன்றைய இளைஞர்களிடம் மிகச் சாதாரணமாக புழங்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக, கல்லூரி மாணவர்கள், பள்ளிக்கூட மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்கள் என அனைத்து மட்டங்களிலும் இது ஊடுருவி வருகிறது. கல்வியிலும், மனித வளக் குறியீட்டிலும் முதன்மை நிலையில் உள்ள தமிழ்நாடு, மிகச் சமீப காலங்களாகவே போதைப் பொருட்களால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினங்களில், உருவாகின்ற சிறார் குற்றவாளிகளின் பின்னணியில் கொடிய போதைப் பழக்கங்களே முதன்மையான காரணியாக உள்ளன. போதையானது, சுகிப்பவர்களை மட்டும் கொல்வதில்லை, சுற்றி இருப்போரையும் சேர்த்தே கொன்று விடுகிறது. எனவே இதனை ஒரு தனி மனித தவறாகவோ அல்லது தனி நபர் இழப்பாகவோ பார்க்காமல், ஒட்டு மொத்த சமூகத்தின் இழப்பாக நாம் பார்க்க வேண்டும். கஞ்சா போதையால் ஒவ்வொரு குற்றச் சம்பவம் நடக்கும் போதும் காவல்துறை முடுக்கி விடப்பட்டாலும் மீண்டும் மீண்டும் அந்த சம்பவங்கள் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காவல்துறை எத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், கஞ்சா பரவலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறிவருவது கண்கூடாகத் தெரிகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்த தகவல்கள் காவல்துறைக்கு அளிக்கக் கூட அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், காவல்துறையிலேயே கஞ்சா கும்பலுக்கு ஆதரவான சில கருப்பு ஆடுகள் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் நடைபெறுவதைச் செய்தியாக வெளியிட்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொலை செய்யப்பட்டார். இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழல்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை கலாச்சாரமும், அதனால் ஏற்படும் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வரும் நிலையில், 'போதையில்லா தமிழகம்' என்கிற இலக்கை அடையும் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் முன்னெடுத்தார். ஆனால், களச்சூழல்கள் எதிர்மறையாகவே சென்று கொண்டிருக்கின்றன. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றுதல் என்கிற நடவடிக்கையை தாண்டி, அதன் பயன்பாடு, அதன் மூலம் நடைபெறும் குற்றச் செயல்களை தடுத்தல், அதன் காரணமாக குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்தல் போன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலமாகவே அந்த இலக்கை அரசு அடைய முடியும். அந்த வகையில் தொடர்ச்சியாக கண்காணிப்பில் காவல்துறை ஈடுபட வேண்டும். அதன் மூலமே இதுபோன்ற சமூக விரோத செயல்களை தடுத்திட முடியும். இளைஞர்கள்தான் தமிழகத்தின் எதிர்காலம். அவர்கள் தான் விலைமதிப்பற்ற சொத்துகள். அவர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாகக் கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல்துறையும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் விற்பனையைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தனியாக சிறப்பு பிரிவை அமைத்து போதையின் பிடியில் சிக்கியுள்ள தமிழக இளைஞர்களைக் காக்க வேண்டும்.

இணையதள போதை மருந்துக் குழுக்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் தனித்தனிப் படைகள் அமைக்கப்பட்டு, எங்கெல்லாம் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும்; போதைப் பொருட்களை விற்பனை செய்வோரைக் கைது செய்து கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். மட்டுமின்றி, போதைப் பொருட்களை விற்பனை செய்வோரின் சொத்துக்களை முடக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். போதைப் பொருட்கள் புழக்கத்தில் மிக முக்கிய பங்கை டாஸ்மாக் வகிக்கின்றது என்பதை மறுக்க முடியாது. ஆகவே எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்திவரும் மதுவிலக்கை அமல்படுத்தி, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் ஒரு பொறுப்புள்ள அரசாக இழுத்து மூடி, போதையில்லா தமிழ்நாடு என்கிற முழக்கத்தை களத்தில் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story