தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் பெண்ணுக்கு ஆபத்தான அறுவை சிகிச்சை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் பெண்ணுக்கு இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் ஆபத்தான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர், இவருக்கு வலிப்பு, தலைசுற்றல், செவியில் இரைச்சல், பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இது தொடர்பாக இவருக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது, டக்கயாசு தமனி அழற்சி என்கிற நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அதாவது, இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை அனுப்பக்கூடிய பெரும் தமனி என்கிற மிக முக்கியமான ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நோய் முதன் முதலாக ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் 40 லட்சம் பேரில் ஒருவரும், ஆசிய கண்டத்தில் 10 லட்சம் பேரில் 2 முதல் 3 பேரும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த அரிய வகை நோயால் கை உள்ளிட்ட உறுப்புகள் செயல்படாத நிலை ஏற்படும். இதற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் மட்டுமே மிக அரிதாக சிகிச்சை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனையில் ரூ. 5 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளனர். ஆனால், போதிய பொருளாதார வசதி இல்லாததால், இப்பெண் 8 ஆண்டுகளாக மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக தலைசுற்றல் அதிகமானதால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இப்பெண் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மூளை நரம்பியல் மருத்துவத் துறையின் மூலம் ரத்த நாள அறுவை சிகிச்சை துறையிலுள்ள மருத்துவர்களின் அறிவுரைப்படி இப்பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் இப்பெண்ணுக்கு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துள்ளதை அறுவை சிகிச்சை செய்து முன்னேற்ற முடியும் என்பதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, இப்பெண்ணுக்கு பிற துறைகளின் உதவியுடன் இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் பெரும் தமனிக்கு பதிலாக செயற்கை ரத்தக் குழாய் பொருத்தப்பட்டது. அதாவது ஏறும் பெருநாடியிலிருந்து உறக்க நாடி வரை மாற்று வழி இணைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது அப்பெண் நலமாக உள்ளார்.

இந்தச் சிகிச்சை தஞ்சாவூரில் முதல் முதலாக செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் செலவு செய்து மேற்கொள்ளக்கூடிய இந்தச் சிகிச்சை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. மிக ஆபத்தான இச்சிகிச்சை மேற்கொண்ட ரத்த நாள அறுவை சிகிச்சை துறைத் தலைவர் எஸ். மருதுதுரை உள்ளிட்ட மருத்துவக் குழுவினரை பாராட்டுகிறேன் என்றார் பாலாஜிநாதன். அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story