தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தர்ப்பணம் அளிக்க குவிந்த மக்கள் 

தை அமாவாசையை முன்னிட்டு முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர்.

அமாவாசை தினம் என்றாலே வழிபாடு நடத்துவதற்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவதற்கு ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை காலங்கள் சிறப்பானதாக பார்க்கப்படுகிறது . உயிர் நீத்தவர்களை திதி காலங்களில் அவர்களை நினைத்து வழிபாடு நடத்த முடியாதவர்கள் கூட இந்த தை அமாவாசை காலத்தில் வழிபாடு நடத்தலாம். முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்துவது அனைத்து பகுதிகளிலும் நடக்கும் ஒன்றாக இருந்தாலும் நீர் நிலைகளில் வழிபாடு நடத்துவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

இன்று தை அமாவாசை தினம் என்ற நிலையில் தாமிரபரணி நதி பாயும் பாபநாசம் முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் புன்னக்காயில் பகுதி வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் நீத்த முன்னோர்களை நினைத்து நீர் நிலைகளில் நீராடி, தண்ணீர் இறைத்து, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்துகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வருகின்றனர்.

இதற்காக கைலாசநாதர் கோவில் முன்புள்ள படித்துறையில் தங்களது முன்னோர்களுக்கு என் உப்பு படைத்து தங்களது முன்னோர்களை வழிபாடு செய்து ஆற்றில் நீராடினர் அதைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக் கரையில் உள்ள பிரசித்தி பெற்ற நவகைலாயங்களில் ஐந்தாவது ஸ்தலமாக விளங்கும் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர். தை அமாவாசையை முன்னிட்டு வருடம் தோறும் முறப்பநாட்டில் அதிக அளவு பக்தர்கள் கூறுவார்கள் என்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி போன்ற பகுதிகளில் உள்ள தாமிரபரணி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

Tags

Next Story