மகளிருக்கான விடியல் பயணதிட்டம் ஊட்டியில் இன்று துவக்கம்!

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் அதிக பேருந்துகள் குக்கிராமங்கள் வரை இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நீலகிரி, ஏற்காடு, கொடைக்கானல், கொல்லிமலை உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கான மகளிருக்கான விடியல் பயணத்திட்டம், மலைப் பகுதிக்கான விரிவாக்க துவக்க விழா இன்று ஊட்டியில் நடந்தது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி எம்.பி ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்காக 11 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 99 பேருந்துகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதி உதவி மூலம் ரூபாய் 8.32 கோடி செலவில் 16 புதிய பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தன. பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், 10 ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கு மேல் அரசு பேருந்துகளை விபத்தில்லாமல் இயக்கிய ஓட்டுநர்களுக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது. போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், " தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற நாளில் இருந்து மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ஒரு புரட்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. மாநில திட்டக்குழு ஆய்வில் மகளிருக்கான இலவச பயணததால் அந்த கட்டணத்தை வைத்து பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கும், மருத்துவ செலவிற்கு உபயோகமான உள்ளதாக பெண்கள் தெரிவித்துள்ளனர் என்பது தி.மு.க., அரசின் சாதனை. மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் குக்கிராமங்கள் வரை அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது, இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் பேருந்து ஓட்டுநர்கள் தான். நிதிநிலை அறிக்கையில் தமிழக முதலமைச்சர் போக்குவரத்து துறைக்கு 3500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். அதே போல் டீசல் மானியத்திற்க்கும் நிதி ஒதுக்கியுள்ளார். போக்குவரத்து ஊழியர்களுக்கு சீனியர், ஜீனியர் என்ற முறையில் ஊதியம் வழங்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளார்," இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story