எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்த தயாநிதி மாறன்
எடப்பாடி பழனிசாமி
தன் மீது அவதூறாக குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மீது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் வழக்கு பதிவுக்காக எழும்பூர் நீதிமன்றம் வந்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தயாநிதிமாறன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னுக்கு பின் புறம்பாக நான் தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என பொய் என்று தெரிந்தே அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே இதுகுறித்து 24 மணி நேரத்தில் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன் என்று தெரிவித்திருந்தேன். 24 மணி நேரமாகியும் அவர் மன்னிப்பு கேட்காததால் அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கினை பதிவு செய்திருக்கிறேன். இந்த வழக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தொகுதி நிதியில் சுமார் 17 கோடியில் 17 லட்சம் தான் மீதம் உள்ளது. தொகுதி நிதியை மத்திய சென்னைக்காக செலவழித்துள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி தோல்வி விரக்தியில் பேசி வருகிறார். அவர் பேசுவது அவருக்கு தெரிகிறதா என்று தெரியவில்லை. ஏதோ வந்தோம் பேசினோம் திமுகவினரை தாக்கினோம் என்று பேசி இருக்கிறார். உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும். என் தொகுதிக்கு சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறேன். செய்தி வெளியிட்ட ஆங்கில நாளேடு ஆர்.டி.ஐ மூலமாக அந்த செய்தியை பெற்றதாகவும் இதற்கு மறுப்பும் தெரிவித்து இருக்கிறது. இதேபோலவே ஆர்டிஐ யில் வந்த தவறான செய்தியை அண்ணாமலையும் செய்தார். ஆர்டிஐ முறை பாஜக ஆட்சியில் எப்படி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது, என்றார்.