ஊடகத்தினர் புகைப்படம் எடுக்க அனுமதி மறுப்பு - வாக்களிக்காமல் வெளியேறிய முன்னாள் எம்பி

விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன் என கூறிவிட்டு சென்றார்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபர்ட் மார்சல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப. குமார் காலையில் வாக்களிக்க சென்றார். நீண்ட வரிசையில் காத்திருந்து சென்ற அவர். பின்னர் வாக்குச்சாவடி மையத்துக்குள் வாக்களிக்க சென்றார். அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால், செய்தியாளர்கள் தங்களுக்கு தேர்தல் ஆணையத்தால், திருச்சி மாவட்ட ஆட்சியர் மூலம் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய இந்த அனுமதி அட்டை எதற்கு என்றும், திமுக அமைச்சர்கள் இன்று வாக்களிக்க வந்த பொழுது நாங்கள் 40க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் சென்று புகைப்படம் எடுத்தோம், திமுகவிற்கு மட்டும் அனுமதி, அதிமுகவினருக்கு இல்லையா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை பார்த்து அதிமுக முன்னாள் எம்பி குமார்.. அங்கிருந்த அதிகாரியிடம் நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன் என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்திலிருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story