துணை முதல்வராகும் உதயநிதி?அமைச்சரவையில் நடக்கபோகும் அதிரடி மாற்றம்!
உதயநிதி
தமிழகத்தில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட இருப்பதாகவும், தமிழக தலைமைச்செயலாளர் விரைவில் மாற இருப்பதாகவும், அதனையடுத்து உதயநிதி துணை முதல்வராகப் பதவியேற்க உள்ளார் என்றும் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான 5 ஆம் கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகின்றது. இந்தியா கூட்டணிக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக அரசியல் வியூகர்கள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே ஜூன் 2க்கு பிறகு திமுக மாநில அமைச்சர்களில் மாற்றம் நடக்கும் என்று சில நாள்களாகவே தகவல் கசிந்து வருகிறது. மேலும் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பது உறுதி என்றே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதற்கேற்றாற்போல் உதயநிதியும் தேர்தல் முடிவுக்கு பின், ஓட்டுகள் குறைந்த 'பூத்' கமிட்டி வார்டுகள், அதற்கான காரணங்களையும் அறிக்கையாக தரும்படி நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் திமுக அமைச்சரவை மாற்றம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் லக்ஷ்மணன் பேசுகையில், இப்போது உள்ள தலைமைச்செயலாளர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். அடுத்து முதலமைச்சரின் செயலாளர் முருகானந்தம் அந்தப் பதவிக்கு வரலாம்.
இரண்டு மாதங்கள் முன்னதாகவே உதயநிதியைத் துணை முதல்வராகப் பதவி வழங்க இருப்பதாகப் பேச்சு எழுந்தது. இப்போது மக்களவைத் தேர்தல் முடிந்துவிட்டது. இனிமேல் திமுகவின் ஒவ்வொரு முடிவும் அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே இருக்கும். ஆகவே, மாவட்டச் செயலாளர்கள் பொறுப்புகளில் மாற்றம் இருக்கலாம். அல்லது ஒரே மாவட்டத்திற்கு இரண்டு பொறுப்பாளர்களைப் போடலாம்.
புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
கூடுதலாக ஒரு சிறுபான்மையினர் அமைச்சர் சேர்க்கப்பட்டு ஒரு அமைச்சர் நீக்கப்பட உள்ளது. ஒருவேளை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அமைச்சர்கள் மாற்றத்தில் அதற்காகக் கால அவகாசம் திமுகவுக்குத் தேவைப்படும்.
அப்படி மத்திய அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றால், தமிழ்நாட்டில் உடனடியாக அமைச்சர்கள் மாற்றம் நடக்கும் என்பது உறுதி.
செந்தில் பாலாஜியின் ஜாமின் கிட்டத்தட்ட முடிவுக்கு எட்டப்படாத நிலையில் 5 அமைச்சர்களுக்கான மாற்றம் நடப்பதாகவும், அந்தப் பட்டியலில் ஏற்கெனவே பாதி முதல்வராகத்தான் செயல்பட்டு வரும் உதயநிதிக்கு துணை முதல்வராகப் பதவி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தொழில்துறை அமைச்சர் பொறுப்பும் கூடுதலாகக் கொடுக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது.
இப்போது தொழில்துறை அமைச்சராக உள்ள டிஆர்பி ராஜா, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சேகர்பாபுக்கு, முத்துசாமி ஆகியோரது அமைச்சர் பொறுப்புகள் மாற்றப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. " என தெரிவித்துள்ளார்.