டெர்பி குதிரை பந்தயம் ரூ.77 லட்சம் பரிசு

டெர்பி குதிரை பந்தயம் ரூ.77 லட்சம் பரிசு

குதிரை பந்தயத்திற்கு பரிசு தொகை அறிவிப்பு

ஊட்டியில் வருகிற 12-ம் தேதி தேதி நடைபெறும் டெர்பி குதிரை பந்தயத்துக்கு ரூ.77 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் ,ஊட்டியில் கோடை சீஸனின் போது மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு 137-வது குதிரை பந்தயம் கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்காக பெங்களூர், சென்னை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. முக்கிய போட்டியான நீலகிரிஸ் டெர்பி ரேஸ் வரும் 12-ந் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி ஊட்டி குதிரை பந்தய மைதானத்தில் நடைபெற்றது. மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் தர்ம பிரசாத், கோப்பை ஸ்பான்சர் எச்.பி.எஸ்.எல்., நிறுவன தலைவர் சுரேஷ், ரேஸ் கிளப் நிர்வாகி வின்சென்ட் ஆகியோர் கோப்பையை அறிமுகம் செய்தனர். மெட்ராஸ் ரேஸ் கிளப் செயலாளர் தர்ம பிரசாத் கூறும் போது, ‘'குதிரை பந்தயத்தின் முக்கிய நிகழ்வான நீலகிரிஸ் டெர்பி வரும் 12-ம் தேதி பகல் 1 மணிக்கு நடைபெறும். 1600 மீட்டர் தூரம் கொண்டு இந்த பந்தயத்தில் 11 குதிரைகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கு பரிசு தொகையாக ரூ.77 லட்சம் அறிவிக்கப்படுகிறது. வெற்றி பெறும் குதிரையின் உரிமையாளருக்கு கோப்பை மற்றும் ரூ.38 லட்சத்து 11 ஆயிரத்து 500, பயிற்சியாளருக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரம், ஜாக்கிக்கு ரூ.3 லட்சத்து 46 ஆயிரத்து 500 வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.14 லட்சத்து 61 ஆயிரத்து 75, மூன்றாம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பிடிக்கும் குதிரைக்கு ரூ.3 லட்சத்து 17 ஆயிரம் வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் மற்றும் குதிரை பந்தய ஆர்வலர்கள் வந்து பந்தயத்தை கண்டுகளிக்கலாம்,’' என்றார்.

Tags

Next Story