திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
திருச்செந்தூர் கோயிலில் முகூர்த்த தினத்தையொட்டி, நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கோடை விடுமுறை தொடங்கியதிலிருந்தே நாள்தோறும் பக்தகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, முகூா்த்த நாள்கள், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியவாறு இருந்தது. இந்நிலையில், மூகூா்த்த தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, காலை 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்றன.
பக்தா்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் பொது தரிசன வரிசை, ரூ.100 கட்டண தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்கள் வழியில் பக்தா்கள் கூட்டம் அதிகமாயிருந்தது. கோயில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. மணமக்கள் குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்களால் கூட்டம் நிரம்பி வழிந்தது.