தமிழக அரசு இடம் தரவில்லையா? விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய வேறு இடம் இல்லையா?
தேமுதிக நிறுவன தலைவராகவும் கேப்டனாகவும் அழைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் . கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அப்போது தேமுதிக சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை என தெரிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை அவருக்கு கொரோனா தாக்கியது உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக தேமுதிக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று காலை 6.10 மணி அளவில் பிரிந்தது.அவருக்கு வயது 71 ஆகும். அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விஜயகாந்த் இல்லத்தில் உள்ள தேமுதிக கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி காரணமாக அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சடங்குகள் முடிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் தலைவராக சென்று விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த தேமுதிக தொண்டர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னைக்கு வருகின்றனர்.
விஜயகாந்த் உடலை சென்னையில் பொது இடத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு இடம் வழங்கி அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கை தேமுதிக தரப்பில் விடுக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் விஜயகாந்த் உடலை நல்லடக்கம் செய்ய அரசு அனுமதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கி இருந்தது.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலேயே நாளை மாலை சுமார் 4.45 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது மைத்துனர் சுதீஷ் அறிவித்துள்ளார். முழு அரசு மரியாதையுடன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மறைந்த கட்சித் தலைவரின் உடலை, கட்சி வளாகத்தில் அடக்கம் செய்வது முதல் முறையல்ல. கடந்த 2002 ஆம் ஆண்டு மறைந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் உடல் தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் மைதானத்தில் காமராஜர் அரங்கம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது என்பது நினைவு கூரத்தக்கது. விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பணியாற்றியவர். சென்னை கோயம்பேட்டில் அவர் சொந்த மாக உழைத்து வாங்கிய இடத்தில் தமது பெற்றோர் ஆண்டாள் - அழகர் என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டினார். அந்த மண்டபம் மேம்பாலம் கட்டுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று அந்த மண்டபத்தின் முக்கால் பகுதியை கடந்த கால திமுக அரசு இடித்து தள்ளி, இடத்தை கையகப்படுத்தியது. மண்டபத்தின் எஞ்சிய பகுதியை மறுகட்டமைப்பு செய்து , அதை தேமுதிக அலுவலகமாக விஜயகாந்த் மாற்றினார். அந்த கட்சி வளாகத்தில் தான் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவர் சொந்தமாக உழைத்து , கட்டிய இடத்தில் தான் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் கடைசியாக டிசம்பர் 14 ஆம் தேதி தேமுதிக அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.