இ-பாஸ் எடுக்காமல் கொடைக்கானல் சுற்றுலா போயிட்டீங்களா..? வருத்தப்பட வேண்டாம் !!!

இ-பாஸ் எடுக்காமல் கொடைக்கானல் சுற்றுலா போயிட்டீங்களா..? வருத்தப்பட வேண்டாம் !!!

கொடைக்கானல் 

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனிடையே இ பாஸ் எடுக்காமல் வந்தாலும், சோதனை சாவடியில் உடனடி இ-பாஸ் எடுத்து தர அதிகாரிகள் உதவி செய்கிறார்கள்.

கொடைக்கானலில் பெய்த மழையால் வானிலை அடியோடு மாறிக்கிடக்கிறது. கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தற்போதும் மழைக்கான வாய்ப்பு கொடைக்கானல் பகுதியில் அதிகமாக உள்ளது. இதனால் மலைகளின் இளவரசி தற்போது குளுகுளு கால நிலையில் இருக்கிறது.

கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கிறார்கள்.

கொடைக்கானல் போக வேண்டும் என்றால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இபாஸ் பெறுவது கட்டாயம் ஆகும். இ பாஸ் எடுத்தவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி கொடைக்கானலில் 3 வகையான அடையாள கோடுகளுடன் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

உள்ளூர் பகுதி பொதுமக்களுக்கு பச்சை நிற அடையாள கோடுடனும், வேளாண் விளைப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படை தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீல நிற அடையாளக் கோடுடனும், சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதாநிற அடையாளக் கோடுடனும் இ-பாஸ் கொடைக்கானலில் வழங்கப்படுகிறது.

இ-பாஸ் ஆன்லைனில் வாங்கி கொள்ள முடியும் என்கிற நிலையில், கொடைக்கானலில் வசிக்கும் உள்ளூர் மக்கள் இ-பாஸ் பெறுவதற்கு வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி தலைமையில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வாகன பதிவுச்சான்று, காப்புச்சான்று, மாசு கட்டுப்பாடு சான்று ஆகியவற்றை கொடுத்து உடனடியாக இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம்.

நேற்று வரை மொத்தம் 26 ஆயிரத்து 694 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் 9 ஆயிரத்து 222 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. இதற்கிடையே முதல் நாளான நேற்று இ-பாஸ் பெற்ற 1,217 வாகனங்கள் கொடைக்கானலுக்கு வந்தன.

இதனிடையே வெளிமாவட்ட, வெளிமாநில வாகனங்களுக்கு இ-பாஸ், உள்ளூர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பாஸ் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க ஏற்படும் சந்தேகங்களுக்கு தொலைபேசி எண்- 0451 2900233, செல்போன்- 94422 55737 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்று திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

இ-பாஸ் பெறாமல் வருகை தரும் சுற்றுலா பயணிகள், உடனடியாக இ-பாஸ் பெறுவதற்கும் அரசு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர். இதனால் இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் உடனடியாக இ-பாஸ் பெற்று பயணிக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இ-பாஸ் சோதனை என்பது வெள்ளி நீர்வீழ்ச்சியில் உள்ள சோதனைச்சாவடிக்கு பதிலாக கொடைக்கானல் மலை அடிவாரமான தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியிலோ அல்லது தேனி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காட்ரோட்டிலோ வைத்தால் எளிதாக இருக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story