ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
தேர்தல் நேரத்தில் வெளிவருகிற பட்ஜெட் நிச்சயமாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பாராளுமன்றத்தில், ஒன்றிய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றும் வெற்று அறிக்கையாகவே உள்ளது. தேர்தலுக்கு முந்தைய கடைசி பட்ஜெட் என்பதால் விவசாயிகளிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், முற்றிலுமாக ஏமாற்றம் தருவதாகவே உள்ளது. விவசாய விளை பொருட்களுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்துள்ள அடிப்படையில், ஏற்கனவே ஒன்றிய அரசு ஏற்றுக்கொண்டபடி குறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாக்கும் என்ற எதிர்பார்ப்பு நடக்கவில்லை. விவசாய இடுபொருட்கள் உரம் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை குறைப்பு அறிவிப்பும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முற்றிலுமாக இல்லை. நீண்ட காலமாக கடன் சுமையால் தவிக்கும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பும் எதிர்பார்ப்பும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது. விவசாயிகள் துயர் துடைக்க ஏற்கனவே நடைமுறையில் இருந்தது போல், பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்தும் என்ற எதிர்பார்ப்பும் அறிவிப்பில் இல்லை. தேர்தல் நேரத்தில் வெளிவருகிற பட்ஜெட் நிச்சயமாக விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் பட்ஜெட்டாக இருக்கும் என்ற நம்பிக்கை நிறைந்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story