அதிமுக பொதுக்கூட்டத்தில் பணம் பட்டுவாடா - வீடியோ வைரல்
பணம் பட்டுவாடா
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வனை ஆதரித்து முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்க நேற்று ஊட்டிக்கு வந்தார். கூட்டத்தில் தி.மு.க., அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அ.தி.மு.க., சார்பில் மேற்கொள்ளப்பட்ட நலத் திட்டங்களையும் பட்டியலிட்டார். குறிப்பாக ஊழல் குற்றச் சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து கூட்டம் முடிந்து, கார் மூலம் கோவை பொதுக்கூட்டத்திற்கு சென்று விட்டார். முன்னதாக ஊட்டியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க., தொண்டர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டம் முடிந்து திரும்பிய தொண்டர்களுக்கு கூட்டம் நடந்த ஏ.டி.சி., பகுதியில் அந்தந்த கிளை செயலாளர் மூலம் பண பட்டுவாடா வேலைகள் ஜருராக நடந்தது.
அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு 1000 முதல் 500 ரூபாய் வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அனைத்து நபர்களுக்கும் தனித்தனியாக பிரித்துக் கொடுக்க முடியாததால், பொதுமக்களை ஒருங்கிணைத்து கூட்டி வந்த நபர்களிடம் மொத்த தொகையாக பணம் வழங்கப்பட்டது. இதற்கிடையே மாவட்டத்தின் தூரமான பகுதிகள் இருந்து வந்த ஒரு சிலர் உடனடியாக பணத்தை தருமாறு காத்திருக்க முடியாது என்றும் கூறி பணத்தை வாங்கிச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.