தீபாவளி தொடர் விடுமுறை: குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள் கூட்டம்
தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கடந்த 3 நாட்களாக மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர். அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர். 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. வட்டக்கோட்டைக்கும் உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது.
Next Story