நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி..? - கண்டிஷன் போடும் பிரேமலதா விஜயகாந்த்!
Premalatha Vijayakanth
Premalatha Vijayakanth: நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சி 14 தொகுதிகளை ஒதுக்குகிறதோ அந்த கட்சியுடன் தான் கூட்டணி என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தேர்தல் திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் உள்ள பிரதான கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை கூட்டணி அமைப்பது, தேர்தல் வியூகம், வாக்குறுதிகள், பூத் கமிட்டிகள் அமைப்பது, தேர்தல் பிரதிநிதிகளை தேர்வு செய்வது, மக்களின் கருத்து கேட்பது உள்ளிட்ட பணிகளில் போட்டிப்போட்டுக் கொண்டு தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த சூழலில் ஜெயலலிதாவின் மறைவால் இரண்டாக பிளவுப்பட்டுள்ள அதிமுக, பாஜகவின் கூட்டணியை முறித்துக் கொண்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், அதிமுகவுடனும், பாஜகவுடனும் தேமுதிக பேசி வருகிறது. அண்மையில் விஜயகாந்த் மறைந்ததால் தேமுதிக கட்சியின் மீதான அனுதாப சாயல் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. கட்சியின் தலைமை இடத்தில் பிரேமலதா விஜயகாந்த் இருக்கும் நிலையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசித்து வருகிறார்.
அந்த வகையில் சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “இன்று மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பல மாவட்ட செயலாளர்கள் தனித்து தேர்தலில் போட்டியிடலாம் என்று கருத்து தெரிவித்தனர். கேப்டன் விஜயகாந்தை வைத்து பரிதாப வாக்குகளை வாங்கும் எண்ணம் எங்களிடம் இல்லை. கேப்டன் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல். கேப்டனின் வழிகாட்டுதலின் படி, எங்களுக்கு யார் அதிகமாக தொகுதி ஒதுக்கிறார்களோ அவர்களுக்கு தான் கூட்டணி இருக்கும். அதிமுக அல்லது பாஜக என எந்த கட்சியாக இருந்தலௌம், 2014ம் ஆண்டு தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதை போல், 14 மக்களவை தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை தொகுதியையும் தர வேண்டும். அப்படி எங்களின் விருப்பப்படி தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும். ஆனால், தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாகவோ மறைமுகமாகவோ யாரிடமும் நாங்கள் பேசவில்லை. இனிமேல் தான் தேர்தல் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும். வரும் 12ம் தேதி தேமுதிகவின் மண்டல பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக எங்களின் நிலைபாடு குறித்து உறுதியாக முடிவெடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.
இறுதியாக நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்லாமல் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து கட்சியின் பயணம் இருக்கும் என்றதுடன், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் தன்னை போட்டியிட வேண்டும் என்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள் விரும்புவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார்.
இதன் மூலம் பிரேமலதா விஜயகாந்த் தேர்தலில் போட்டியிட்டு களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 14+1 தொகுதியை தேமுதிக கேட்பதால் அதிமுக அவ்வளவு தொகுதிகளை ஒதுக்குமா என்பது கேள்விகுறியாக உள்ளது. அப்படி தேமுதிக விரும்பும் தொகுதிகளை அதிமுக ஒதுக்கவில்லை என்றால், அக்கட்சியின் கூட்டணி பாஜகவுடன் இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.