திமுக வேட்பாளர் நேர்காணல் : கனிமொழி எம்பி பங்கேற்பு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் நேர்காணலில் கனிமொழி எம்பி பங்கேற்றார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவர்களுக்கு நேர்காணல் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. இதில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி விருப்பமனு அளித்திருந்தார். இந்நிலையில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த கனிமொழி பங்கேற்றார்.
கனிமொழி கருணாநிதியிடம் தி.மு.க. தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதித்தனர். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட தி.மு.க. சார்பில் கனிமொழி கருணாநிதியை தவிர வேறுயாரும் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.