இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட தி.மு.க., தொண்டர்.
இந்தியா முழுவதும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்ட தி.மு.க., தொண்டர்.
இந்திய நதிகள் அனைத்தையும் இணைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழ் பரப்பும் வகையிலும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் சஞ்சீவி, ஜூன் 1ம் தேதி தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 8500 கி.மீ., சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சஞ்சீவி, பல்வேறு மாநிலங்கள் பயணம் செய்து இன்று காஞ்சிபுரம் வந்தடைந்தார்.
இவர் இந்திய அளவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், மாநிலங்களிடையே எவ்வித பிரச்னையும் இல்லாமல், நதி நீரைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2002, 2018ம் ஆண்டுகளில் நாடுமுழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, மக்களிடையே விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டார். திருத்தணியில் புறப்பட்டு சென்னை, புதுச்சேரி, கடலூா், சிதம்பரம், காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், திருச்சி, கரூா், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருப்பூா், கோயம்புத்தூா், மைசூரு, தலச்சேரி, மங்களூரு, கோவா, மும்பை, சூரத், அகமதாபாத், உதய்பூா், அஜ்மீா், ஜெய்ப்பூா், சண்டிகா், டில்லி, லக்னோ, வாரணாசி, பாட்னா, ராஞ்சி, கொல்கத்தா, புவனேஸ்வா், விசாகப்பட்டினம், விஜயவாடா, சூரியபேட், ஹைதராபாத், கா்னூல், அனந்தபூா், சிக்பள்ளாபூா் பெங்களூர் கிருஷ்ணகிரி வழியாக தற்பொழுது காஞ்சிபுரம் வந்தடைந்ததாக தெரிவித்தார்.
இதனையடுத்து சென்னை சென்று தனது சைக்கிள் பயணம் நிறைவடைந்த பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க இருப்பதாகவும் கூறினார். பல்வேறு மாநிலங்களில் தனக்கு வரவேற்பு நன்றாக கிடைத்ததாகவும் , நல்ல விஷயத்திற்காக சைக்கிள் பயணம் செய்வதாகவும் பலர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறினார். நதிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து தி.மு.க. தொண்டர் ஒருவர் சைக்கிள் பயணம் செய்து வருவது மக்கள் இடையே வரவேற்பு பெற்றுள்ளது.