தோல்வி பயத்தில் திமுக - எல். முருகன்

தோல்வி பயத்தில் திமுக - எல். முருகன்

தோல்வி பயத்தில் திட்டமிட்டு தி.மு.க., அரசு வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தோல்வி பயத்தில் திட்டமிட்டு தி.மு.க., அரசு வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

நீலகிரியில் பா.ஜ.க., வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இதற்காக கடந்த ஒரு மாதமாக நீலகிரி தொகுதியில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மத்திய அரசின் நல திட்டங்களை எடுத்துக் கூறியும், தி.மு.க., ஆட்சியில் இருந்த குறைபாடுகளை சுட்டிக் காட்டியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுதல், ஜமாப் அடித்தல், படுகரின மக்களுடன் நடனமாடுதல் என அவருடைய பிரசாரம் களை கட்டியது. இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான இன்று சென்னையில் வாக்களித்தார்.

இன்று மாலை ஊட்டியில் உள்ள கோபர்ட் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணி மற்றும் இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகளை பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி தொகுதியில் பல இடங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். பல இடங்களில் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. பல்வேறு வாக்காளர்களின் பெயரை வேண்டுமென்றே தி.மு.க., அரசு எடுத்துள்ளது.

இது குறித்து முறையாக விசாரணை செய்ய வேண்டும். இறந்தவர்கள் பலருக்கு வாக்கு இருக்கிறது, உயிரோடு உள்ள பலருக்கு வாக்குகள் இல்லை. இதனால் வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையாற்ற முடியவில்லை. ஊட்டி ஹோபர்ட் பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் கடைசி நேரத்தில் வந்த ஒரு சிலருக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் சரியாகவே பணியாற்றியதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேர்தல் அதிகாரிகள் நேர்மையாகவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் கேள்விக் குறியாக உள்ளது. பொதுமக்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டு இருக்கிறது. தோல்வி பயத்தில் திட்டமிட்டு தி.மு.க., அரசு வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்துள்ளது.

வாக்காளர்கள் எவ்வளவு பேர் வாக்களிக்கவில்லை என்பது குறித்த விவரங்கள் சேகரித்து வருகிறோம். அவிநாசி அருகே வாக்கு சாவடிக்கு வந்த ஒரு மூதாட்டி 3ம் எண்ணில் வாக்களிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்த தேர்தல் அலுவலர் ஒன்றாம் எண்ணில் வாக்களிக்க வைத்துள்ளார். இதுகுறித்து நாங்கள் புகார் அளித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story