”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” - மிசா முதல் சிஎம் ஸ்டாலின் ..!

”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” - மிசா முதல் சிஎம் ஸ்டாலின் ..!

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள்

ஸ்டாலினிற்கு அரசியல் விதை 14 வயதிலேயே வேரூன்ற ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம். அவருக்கு 14 வயது இருக்கும்போதே ஆண்டு தனது தாய்மாமனான முரசொலி மாறனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 71வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடியில் இருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இன்று ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள ஸ்டாலின், சிறுவயதில் இருந்து கடந்து வந்த பாதைகள் கரடுமுரடாக தான் இருந்துள்ளது. பெயரிலேயே புரட்சியை கொண்டுள்ள ஸ்டாலினின் சிறு வயது வாழ்க்கையும் புரட்சியில் தான் தொடங்கியது.

1953ம் ஆண்டு இதே நாளில் தயாளு அம்மாளுக்கும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கும் மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். இரண்டாம் உலக போரில் உலகயே மிரள செய்த ஹிட்லரை தோற்கடித்து அன்றைய ஹீரோவாக பார்க்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், ரஷ்ய அதிபருமான ஜோசப் ஸ்டாலின் மார்ச் 5ம் தேதி உயிரிழந்தார். ஜோசப் மீதான பற்று கொண்ட கருணாநிதி தனது செல்ல மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார்.

இப்படி ஒரு புரட்சியாளரின் பெயர் சூட்டப்பட்டதால் என்னமோ, எதிர்காலத்தில் ஸ்டாலின் என்ற அந்த இளைஞர் மத்திய அரசுக்கே சவால் விட்டு தமிழகத்தை ஆளும் தலைமையாக உயர்ந்துள்ளார். ஸ்டாலின் 5 வயதானதும், அவரை சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வெண்டில் படிக்க விண்ணப்பித்துள்ளார் கருணாநிதி. ஆனால், பெயரிலேயே புரட்சியை கொண்டுள்ள ஸ்டாலினிற்கு அங்கு படிக்க அனுமதி மறுத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

இதனால் சென்னை சேத்துப்பட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார். விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பை முடித்தார். 1973-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாநிலக் கல்லூரியில் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றார். இதை தொடர்ந்து 2009 ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கெளரவ முனைவர் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. இப்படி பள்ளி கல்வி முதல் கல்லூரி வரை சென்ற ஸ்டாலினிற்கு அரசியல் ஆர்வம் 14 வயதிலேயே வந்துவிட்டது.

நீதிகட்சியில் தொடங்கி திமுக என்ற தனிக்கட்சி நடத்திய தனது தந்தையான கருணாநிதியின் அரசியல் மற்றும் கலைத்துறை மீதான ஆளுமை ஸ்டாலினை அழகாக செதுக்க தொடங்கியது. கல்லூரி படிக்கும்போதே நாடக கலையில் ஆர்வமாக இருந்த ஸ்டாலின் முதன் முதலாக திருவல்லிக்கேணி என்.கே.டி.கலா மண்டபத்தில் அஞ்சுகம் நாடக மன்றம் நடத்திய "முரசே முழங்கு" என்ற நாடகத்தில் நடித்தார். இந்த நாடகம் கலைஞர் முன்னிலையில், எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்தது. இதேபோல், திண்டுக்கல் தீர்ப்பு, நீதி தேவன் மயங்குகிறான், நாளை நமதே எனப் பல நாடகங்களில் நடித்துள்ளார் ஸ்டாலின். நாடகங்களில் மேடை ஏறி ஸ்டாலின் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்குவதாகவே இருந்தது. நாடகத்தை தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க ஆசைப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 1988ம் ஆண்டு வெளிவந்த ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால், குறிஞ்சி மலர் என்ற நெடுந்தொடரிலும் ஹீரோவாக நடித்தார். திரைப்படங்களிலும் புரட்சியை பேசும் இளைஞராகவே ஸ்டாலின் தோன்றினார்.

ஸ்டாலின் அரசியல் ஆரம்பம்:

ஸ்டாலினிற்கு அரசியல் விதை 14 வயதிலேயே வேரூன்ற ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம். அவருக்கு 14 வயது இருக்கும்போதே ஆண்டு தனது தாய்மாமனான முரசொலி மாறனுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார் ஸ்டாலின். பின்னர், 1973ம் ஆண்டு திமுகவின் பொதுக்குழு உறுப்பினரானார். 1975ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். தேசிய அளவிலும், மாநிலங்களிலும் அதை எதிர்த்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அன்றைய கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு நெருக்கடி நிலையை அடியோடு எதிர்த்ததால், அவர்களை மத்திய அரசு சர்வாதிகார முறையில் அடக்க முயன்றது.

அந்த அடக்குமுறையில் முரசொலி மாறன், ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் என 25,000க்கும் மேற்பட்டோர் உள் நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்பு என்ற ‘மிசா' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது மு. க. ஸ்டாலின் தனது தீவிர அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிறையில் இருந்தபோது அவர் கடுமையாக தாக்கப்பட்டதோடு, அவருடன் சிறையில் அடைக்கப்பட்ட சி. சிட்டிபாபு காயங்களாலும், காவல் துறையின் சித்திரவதைகளாலும், ஸ்டாலினை பாதுகாக்க முயன்று இறந்து போனார். இந்த சம்பவம் ஸ்டாலின் வாழ்க்கையிலும், அவரது அரசியலிலும் தீராதவடுவாக மாறியது. சிறையில்சிறையில் இருந்த போதிலும் கூட ஸ்டாலின் தனது இறுதியாண்டு பி.ஏ. தேர்வுகளை எழுதி முடித்தார்.

பின்னர் கோபலபுரத்தில் இருந்த முடி திருத்தும் கடையில் திருந்தபடி தனது நண்பர்களுடன் இணைந்து திமுக இளைஞரணியை ஸ்டாலின் உருவாக்கினார். அதை தொடர்ந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக திமுக இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். முதன் முதலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியை தழுவினார். பின்னர் 1989ம் ஆண்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.

தொடர்ந்து 1996ம் ஆண்டு நடந்த சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட்டு நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையையும் ஸ்ஆலின் பெற்றார். இவர் மேயராக இருந்த போது தான் சிங்கார சென்னை என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர், மேயர் என வளர்ந்த ஸ்டாலின் 2003ம் ஆண்டு திமுகவின் பொதுச்செயலாளராக மாறினார். பின்னர், 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற ஸ்டாலின், முதன்முதலாக தமிழக அரசின் அமைச்சரானார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைய மிக முக்கிய பங்காற்றினார். தொடர்ந்து 2008ம் ஆண்டு திமுகவின் பொருளாளராக பொறுப்பேற்றார்.

2009ம் ஆண்டு அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமரும் சூழல் ஏற்பட்டது. அதனால், முதலமைச்சராக பல்வேறு துறைகளில் கவனம் செலுத்த முடியாத கருணாநிதி, தனது மகனுக்கு சில துறைகளை ஒதுக்கீடு செய்து, ஸ்டாலினை உள்ளூர் நிர்வாக அமைச்சராக மாற்றினார். பின்னர், தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

2018ம் ஆண்டு வயது மூப்பு காரணமாக கருணாநிதி மறைந்த நிலையில். திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். பின்னர், 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி159 இடங்களை வெற்றி ஆட்சியை கைப்பற்றியது. கருணாநிதி இல்லாமல் முதல்முறையாக ஸ்டாலின் தலைமையில் தேர்தலை சந்தித்த திமுக கட்சி 132 இடங்களில் வென்றது. பின்னர் 2021ம் ஆண்டு மே மாதம் 7ம்தேதி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என ஸ்டாலின் பேசியது திமுக தொண்டர்களை உற்சாகமடைய செய்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சவால்களையும் எதிர்த்து ஆட்சி செய்து வரும் ஸ்டாலின், கருணாநிதிக்கு பிறகு அவரது இடத்தை நிறைவு செய்யும் விதமாக திமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார்.

Tags

Next Story