கருணாநிதி மாநிலம் என மாற்றக்கூடிய நிலையில் திமுக ஆட்சி -கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கலைஞர் பெயர் வைக்கிறார்கள். போகிற போக்கை பார்த்தால் அண்ணா வைத்த "தமிழ்நாடு" என்ற பெயரைக்கூட மாற்றி "கலைஞர் மாநிலம், கருணாநிதி மாநிலம்" என்று மாற்றக்கூடிய நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இது நல்ல விளைவை ஏற்படுத்தாது. திமுக ஆட்சி தொடர்ந்தால் ஒரு பாத்ரூம் கட்டினால் கூட கலைஞர் பெயரை வைக்கக்கூடிய நிலை ஏற்படும். இந்த போக்கை வன்மையாக கண்டிக்கிறேன் இது மாற்றப்பட வேண்டும் என்றார்.
இபிஎஸ் திகார் சிறைக்கு செல்லும் ரகசியத்தை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு. ஒருவேளை ஓபிஎஸ் திகார் சிறைக்கு சென்று, நட்பின் அடிப்படையில் இவர் (EPS)ஐ பார்ப்பதற்கு வேண்டுமென்றால் செல்லலாம். தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 2 அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சிறையில் உள்ளார். மற்றொருவர் மேல்முறையிட்டிற்காக கால அவகாசத்தில் உள்ளார். இந்த பயத்தின் காரணமாக முதல்வர், பிரதமர் மோடியை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். திமுகவின் நிலைப்பாடு. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, வந்தப்பின் ஒரு நிலைப்பாடு என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையினால் ஏமாற்றப்பட்டதன் விளைவுதான் இன்றைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் தேர்தல் அறிக்கையினால் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இந்த ஆட்சியின் முகத்திரை அனைத்து மக்களாலும் கிழிக்கப்படுகின்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது" என்று கூறினார்.