DMK vs ADMK: தேர்தல் கேலிக்கூத்து இது தானா..? - அல்வா...முட்டையால் அடித்துக் கொள்ளும் திமுக, அதிமுக!
DMK, ADMK
DMK vs ADMK: நாடாளுமன்ற தேர்தலால் நெட்டிசன்களையும் ஓவர்டேக் செய்யும் விதமாக தமிழக அரசியல் கட்சிகள் வடிவேலு மற்றும் முட்டையை வைத்து பேனர் அடித்து ஒருவரை ஒருவர் கிண்டலடித்து கொண்டது கேலி கூத்தாகியுள்ளது.
2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத போதிலும் கூட்டணி அமைப்பது, பேரம் பேசுவது, தொகுதி பேச்சுவார்த்தை, வாக்குறுதிகளை தயாரிப்பது, மக்களை சந்தித்து வாக்குறுதி பெறுவது உள்ளிட்ட பணிகள் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக ஆளும் அரசியல் கட்சிகள் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சிப்பதும், எதிர்கட்சிகளை ஆளும் அரசுகள் டேமேஜ் செய்வதற்குமான பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழக அரசியல் களம் வித்யாசமாக சினிமா பாணியில் ஒருவரை ஒருவர் கிண்டலத்து தங்களது மதிப்பை தாங்களே குறைத்து கொள்ளும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் வடிவேலு புகைப்படத்துடன் முட்டை இருக்கும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில், எங்கள் வரிப்பணம் எங்கே என்று கேட்கப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் வரிப்பணம் வழங்காமல் தமிழக அரசு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தான் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு டாட்டா காட்டிய மத்திய அரசை கிண்டலடிக்கும் விதமாக நடிகர் வடிவேலு பாணியில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதாவது நகைச்சுவை காட்சி ஒன்றில் நடிகர் வடிவேலு, தன்னிடம் எதுவும் இல்லை என்பதை குறிக்கும் விதமாக தனது டவுசர் பாக்கெட்டை காட்டுவார். அதேபோல், தங்களிடம் பட்ஜெட் இல்லை என்பதை குறிக்கும் விதமாகவும், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஜீரோ என்பதை குறிக்கும் விதமாக பிளக்ஸ் பேனரில் முட்டையை வைத்து பாஜகவை டார்கெட் செய்துள்ளனர் ஆளும் திமுக அரசு.
இது போதாது என்று தென்மாநிலங்களில் வரிப்பகிர்வில் பாஜக ஒருதலைபட்சமாக நடப்பதாக கூறி குற்றம்சாட்டிய திமுக அரசு, பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அல்வா கொடுத்துள்ளதை விமர்சிக்கும் விதமாக மக்களுக்கு அல்வா பொட்டலங்களை திமுகவினர் விநியோகித்துள்ளனர்.
திமுகவுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும் விதமாக அதிமுக கட்சி சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் வேலைகளை காட்ட தொடங்கினர். அதாவது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொகுதி பக்கம் வருவதில்லை என்பதை குறிக்கும் விதமாக கர்ணன் படத்தில் ஒரு பாடலில் வரும் ’கண்டா வர சொல்லுங்க’ என்பதை குறிப்பிட்டு போஸ்டர் அடித்து அதிமுகவினர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், என்னை தவிர என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என்று கூறியவரை கண்டா வரச் சொல்லுங்க” என்றும் திமுகவை டார்கெட் செய்து அதிமுகவினர் பேனர் அடித்திருந்தனர்.
இந்த பேனரை பார்த்ததும் அதிமுகவினர் சும்மா விடுவார்களா...? பதிலுக்கு நாங்களும் போஸ்டர் அடிப்போம் என்று திமுகவினர் தங்கள் வேலை காட்டியுள்ளனர்.
அதிமுகவினர் பேனர் அடித்த அதே ஸ்டைலில் எடப்பாடியை ஓவர்டேக் செய்து திமுவினர் பேனர் அடித்துள்ளனர். அதாவது ”பதவிக்காக மாநில உரிமைகளை அடகு வைத்த அடிமைகளை கண்டா வர சொல்லுங்க” என குறிப்பிட்டு திமுகவினர் பேனர் அடித்துள்ளனர்.
இப்படி பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த பிரதான அரசியல் கட்சிகள் நெட்டிசன்களை காட்டிலும் தங்களை தரம் தாழ்ந்து விமர்சித்து கொள்வது ஆரோக்கியமான அரசியலா என்ற கேள்வியையே மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.