ஊட்டியில் நாய் கண்காட்சி

ஊட்டியில் நடந்த நாய் கண்காட்சியில், கீழ்படிதல் பிரிவில் நாய்கள் அசத்தி, பார்வையாளர்களை கவர்ந்தன.

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீஸனானா ஏப்ரல், மே மாதங்களில், நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றாக நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது. தென்னிந்தியா கெனல் கிளப் சார்பில் நடப்பாண்டு 134, மற்றும் 135-வது நாய்கள் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நாய் கண்காட்சி இன்று தொடங்கியது. நாய் கண்காட்சிக்கு தமிழகம் உட்பட கொல்கத்தா, பஞ்சாப், டில்லி, மும்பை, ஆந்திரா கா்நாடகா என இந்தியாவின் முழுவதிலும் இருந்து நாய் வளா்ப்போர் தங்களின் நாய்களை போட்டிகளுக்கு அழைத்து வந்தனர்.

சைபீாியன் ஹஸ்கி, பீகெல், பெல்ஜியம் ஷெப்பர்டு, ஜொ்மன் ஷெப்பா்டு, டாபா்மேன், கோல்டன் ரெட்ரீவர் மற்றும் தமிழகத்தை சோ்ந்த ராஜபாளையம், கொம்பை, கன்னி மற்றும் சிப்பிபாறை போன்ற நாட்டு ரக நாய்கள் என மொத்தம் 56 ரகங்களில் 400 நாய்கள் பங்கேற்றுள்ளன. முதல் நாளான இன்று அனைத்து ரக நாய்கள் பங்கேற்ற கீழ்படிதல் போட்டிகள் நடந்தது. இதுதவிர கிரேடன், கோல்டன் ரீட்ரீவர் மற்றும் டேஸ் அவுண்ட் ஸ்பேசல் ஷோ நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட நாய்களுக்கு பாிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் கூறுகையில்,"இன்று தொடங்கிய நாய்கள் கண்காட்சி மூன்று நாட்கள் நடக்க உள்ளது. வெற்றி பெறும் நாய்களுக்கு கேடயங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இன்றும், நாளையும் அனைத்து ரக நாய்கள் பங்கேற்கும் கண்காட்சி மற்றும் அணிவகுப்பு அவைகளின் திறமைகள் குறித்த போட்டிகள் நடக்கிறது. பிலிப்பைன்சை சேர்ந்த மரியோ மக்சசாய், தைவானை சேர்ந்த அலெக்ஸ் ஷி, சிங்கபூரை சேர்ந்த சுவாமிங் கோக், பேட்ரிக் வாங் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். கண்காட்சியின் இறுதி நாளில் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நாய்க்கு ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கப்படும்," என்றனர்.

Tags

Next Story