திராவிட மாடல் அரசு, மகளிருக்கான அரசு- கனிமொழி எம்.பி., பெருமிதம்
கனிமொழி எம்.பி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மாபெரும் ஆலோசனை கூட்டம் அபிராமி மகள் திருமண மண்டபத்தில் நடந்தது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "திராவிட மாடல் அரசு மகளிருக்கான அரசு. புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, பேருந்தில் இலவச பயணம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் கோடிக்க ணக்கான மகளிர் பயன்பெறுகிறார்கள். ஆனால், மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகையை கொடுக்க மறுக்கிறது.
வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட வழங்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் நல்ல திட்டங்களை தொடர்வதில் சிரமம் ஏற்படும். ஓட்டு கேட்டு வரும் பாஜகவினரிடம் எங்களுடைய காசு எங்கே என்று கேட்க வேண்டும். பாஜக மத அரசியல் செய்து வருகிறார். அதிமுக, பாஜக ஒன்றுதான். நாட்டின் தலையெழுத்தை மாற்றவேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் உள்ளது. நிகழ்ச்சியில், மாநகரசெயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மாநகர தொண்டரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்புரை ஆற்றினார் முடிவில் ஜெயசீலி நன்றி கூறினார்.